ARTICLE AD BOX
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா நிறுவனத்தில், நேற்று காலை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கலைஞரின் சீரிய முயற்சியால், ஓசூர் பகுதியில் 1970களில் சிப்காட் வந்தது. அதன் பிறகு தான், அந்த பகுதிக்கு மிகப்பெரிய தொழில் வளர்ச்சி கிடைத்தது. அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
இங்குள்ள டெல்டா கம்பெனி, ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான், நிலங்கள் கொடுக்கப்பட்டு, கம்பெனி துவங்கப்பட்டு, தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் ஓலா போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்துள்ளது. ஏற்கனவே, முதல்வர் ஓசூரில் விமான நிலையம் அறிவித்துள்ளார். அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெங்களூருவுக்கு இணையாக, ஓசூர் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பெங்களூருவுக்கு இணையாக ஓசூர் வளர்ச்சியடையும்: அமைச்சர் டிஆர்பி ராஜா உறுதி appeared first on Dinakaran.