ARTICLE AD BOX
பூண்டு - மிளகு குழம்பு
தேவையானவை: தோல் உரித்த பூண்டுப் பல் – 10, மிளகு – 20, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 6 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பூண்டுப் பல்லை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி, வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். காடாயில் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வேகவைத்த பூண்டு, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். பூண்டு வாயுத்தொல்லையை நீக்கும். மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.
வேப்பம்பூ துவையல்:
தேவையானவை: வேப்பம்பூ – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், புளி – ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காடாயில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு வேப்பம்பூ துவையலை பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப் பூச்சி வரமால் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.
மொச்சை கத்திரி சாம்பார்
தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு – ஒரு கப், பச்சை மொச்சை (தோல் உரித்து) – 100 கிராம், கத்திரிக்காய் – 2, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சை அளவு, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை குக்கரில் வேகவைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி எடுத்து வைக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, சாம்பார் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்த உடன் கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு, வேகவைத்த மொச்சையும் போட்டு, சிறிது கொதித்ததும் வேகவைத்த பருப்பை சேர்க்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி… பெருங்காயம் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும். மொச்சையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.
பயறு வெள்ளரி தயிர்பச்சடி
தேவையானவை: முளைகட்டிய பயறு – 100 கிராம், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தயிர் – தலா ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் (சிறியது) – ஒன்று, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறு, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்து நன்றாக கலக்கவும். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் அருமையான பச்சடி இது. இதில் சிறிய வெங்காயம், தக்காளியையும் சேர்க்கலாம்.