ARTICLE AD BOX
மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் இன்று (25.02.2025) நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், திட்ட செயலாக்கத்தின் போது நேரம் மேலாண்மையை சரியாக பயன்படுத்துவது, நிலம் கையகப்படுத்துதலை குறைத்தல், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக பேசப்பட்டன.
மதுரை மெட்ரோ திட்ட விவரம்
மெட்ரோ பாதை 26.5 கி.மீ. உயர்நிலை (23 நிலையங்கள்), 5.5 கி.மீ. சுரங்கப்பாதை (3 நிலையங்கள்) என அமைக்கப்படும்.
38.21 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும்.
மெட்ரோ திட்டம் மதுரை நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தும், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் பங்கேற்பு
கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், டி.லிவிங்ஸ்டன் எலியேசர், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் என்.ராகவேந்திரன், உள்பட பல்வேறு துறைகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டு, மதுரை நகரின் போக்குவரத்து சூழலை மாற்றும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.