புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு: திமுக, காங். வெளிநடப்பு

7 hours ago
ARTICLE AD BOX

Published : 17 Mar 2025 03:32 PM
Last Updated : 17 Mar 2025 03:32 PM

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு: திமுக, காங். வெளிநடப்பு

<?php // } ?>

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் கொள்கையை அமலாக்குவதாக குற்றம்சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, கேள்வி எழுப்பிய தன்னை பேச அனுமதிக்காமல் எதிர்க்கட்சியினர் குறுக்கிடுவதாக குற்றம்சாட்டி இருக்கை மேல் ஏறி நின்று பேச அனுமதிக்குமாறு என்.ஆர்.காங்கிரஸ் பெண் எம்எல்ஏ பேரவையில் வலியுறுத்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா, "புதிய கல்விக் கொள்கை அமலால் இந்த கல்வியாண்டு முதல் ஆல் பாஸ் முறை ரத்தாகியுள்ளது. அதை தொடர முடியுமா? தொழிற்சார்ந்த படிப்புகளை கற்றுதர கட்டமைப்பு உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கல்வியமைச்சர் நமச்சிவாயம்,"இந்த கல்வியாண்டில் ஆல் பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை 52 அரசு பள்ளிகளில் தொழில் சார்ந்த பயிற்சியாளர், பயிற்சிக் கூடம் உருவாக்கியுள்ளோம். அடுத்த கல்வியாண்டில் 14 பள்ளிகளில் செய்வோம். வரும் 2028-ம் ஆண்டுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் செய்வோம்" என்றார்.

அதையடுத்து எம்எல்ஏ சந்திர பிரியங்கா, "புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி தந்தால் அவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கம் மாறிவிடும்" என்றார். அப்போது திமுக எம்எல்ஏ நாஜிம் குறுக்கிட்டபோது, “உங்கள் பேரக்குழந்தையும், இங்குள்ள பலரின் குழந்தைகளும் சிபிஎஸ்இ பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்'' என்றார்.

அதற்கு “புதிய கல்விக் கொள்கை வேறு - சிபிஎஸ்இ கொள்கை வேறு” என்று திமுக எம்எல்ஏக்கள் பதில் தந்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "ஆர்எஸ்எஸ் அரசாக புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு மாறுகிறது. தந்தை தொழிலைதான் குழந்தைகள் செய்ய வேண்டுமா? புதிய கல்விக் கொள்கையை முதல்வர் ஏற்கிறாரா?" என்றார்.

அப்போது எம்எல்ஏ சந்திர பிரியங்கா, "ஐந்தாவது படிக்கும் குழந்தைகளுக்கு தொழிற் பயிற்சி தருவதை ஏற்கக் கூடாது. இந்த தொழில் பழகினால் பள்ளிக்கு அவர்கள் வரமாட்டார்கள். புதிய கொள்கையில் அனைத்து விஷயங்களையும் ஏற்க வேண்டியதில்லை" என்றார். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், "தவறான கருத்து. 9-வதுக்கு மேல்தான் தொழிற்பயிற்சி, தேர்வு உண்டு. அதற்கு முன்பு கிடையாது" என்றார். அப்போது திமுக எம்எல்ஏ நாஜிம், ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாதா என்று கேட்டார்.

அமைச்சர் நமச்சிவாம், "தொழிற்சார்ந்த படிப்புகளுக்குதான் சொன்னேன். நிறைய விஷயங்கள் தவறாக சித்தரிக்கிறார்கள்." என்றார். இதனால் அவையில் அனைவரும் எழுந்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பேரவைத் தலைவர் “எழுந்து நின்று பேசினால் வெளியேற்றி விடுவேன்" என்றார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “மோசமான ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளை கண்டித்து வெளியேறி விடுகிறோம்" என்றார்.

புதியகல்விக்கொள்கைஅமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு- இருக்கைமேல் ஏறி நின்று என்.ஆர்.காங்கிரஸ் பெண் எம்எல்ஏ | செ. ஞானபிரகாஷ், படங்கள் எம். சாம்ராஜ்

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "புதியக் கல்விக் கொள்கை மத்திய அரசு சட்டமா? 2028-க்கு பிறகு இதை கட்டாயமாக்கிவிடுவீர்கள். மக்கள் கருத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள்" என்றார். அப்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மைக்குகளின் இணைப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா, ''என்னை பேசவிடுங்கள்'' என இருக்கை மேல் ஏறி நின்று கூறினார்.

பேரவைத் தலைவர் செல்வம், ''சிபிஎஸ்இ பாடத்தை புதுச்சேரியில் அமல்படுத்தியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்'' என்றார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ''புதிய கல்விக் கொள்கையை நீங்கள்தான் அமல்படுத்தியுள்ளீர்கள். மாணவர்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் கொள்கையை அமல்படுத்துவதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்'' என்றார். அதையடுத்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article