ARTICLE AD BOX
கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி அரசுமேல்நிலைப்பள்ளியில் நடந்த 20வது பண்பாட்டு விழாவில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று பரிசு வழங்கினார். கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 20வது ஆண்டு விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மதன் மோகன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் பழனி வேலன் வரவேற்புரையாற்றினார். விழா ஏற்பாட்டாளர் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், கணபதி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சுகுமார், அறங்காவலர் குழு தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசும்போது, பள்ளிக் கல்விக்காக தமிழக அரசு அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வருட திமுக ஆட்சியில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் 80 புதிய கள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.
பின்னர் ஆசிரியர்களுக்கு நினைவு கோப்பைகள் மற்றும் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் புதுகும்மிடிப்பூண்டி கிராம பொது மக்கள் பங்கேற்றனர்.
The post புதுகும்மிடிப்பூண்டி அரசுப்பள்ளியில் 20வது பண்பாட்டு விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.