ARTICLE AD BOX
புது ரூல்ஸ்.. இனி ஒரே செட்-டாப் பாக்ஸ் தான்.. DTH பயனர்கள் கவனத்திற்கு.. TRAI அதிரடி உத்தரவு!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் (DTH Set-top Box) தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்றை பரிந்துரைத்து உள்ளது. டிராய்-ன் இந்த பரிந்துரை, நாடு முழுவதும் உள்ள செட்-டாப் பாக்ஸ் பயனர்களுக்கு நிம்மதியை கொடுக்க உள்ளது!
டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் பயனர்கள் தங்கள் சேவை வழங்குநர்களை மாற்றும் போது செட்-டாப் பாக்ஸ்களை மாற்ற வேண்டியதில்லை என்று டிராய் பரிந்துரைத்துள்ளது. அதாவது டாடா ஸ்கையிலிருந்து ஏர்டெல்லுக்கு டிடிஎச் சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள், தங்கள் முழு செட்-டாப் பாக்ஸையும் மாற்ற வேண்டி உள்ளது.

இந்த தொல்லையை நீக்க வேண்டும் என்றும, பல்வேறு சேவை வழங்குநர்களிடையே ஒரே செட்-டாப் பாக்ஸை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் டிராய் பரிந்துரைத்துள்ளது. டிராய்-ன் இந்த பரிந்துரை ஒளிபரப்பாளர்களுக்கு இடையே உள்ள உள்கட்டமைப்பை தன்னார்வமாக பகிரபடுவதையும் ஊக்குவிக்கிறது.
மேலும், பல சேவை வழங்குநர்களுடன் ஒரே செட்-டாப் பாக்ஸை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் மின்னணு கழிவுகளும் (Electronic waste) குறையும். அதே வேளையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த அல்லது தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற டிடிஎச் சேவையை தேர்வு செய்வதற்கான செயல்முறை இன்னும் எளிதாகும்.
டிராய்-ன் இந்த பரிந்துரைகள் ஒளிபரப்புத் துறையில் வளர்ச்சியை தூண்டுவதற்கும், வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் முயல்கின்றன. ஒளிபரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு ஆபரேட்டர்கள் தானாக முன்வந்து உள்கட்டமைப்பை பகிர வேண்டும் என்று டிராய் கூறுகிறது.
இதேபோல இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது கோரப்படாத வணிகத் தொடர்புகளை (unsolicited commercial communication) தீர்க்க கடுமையான விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. சந்தைப்படுத்தல் அழைப்புகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, புதிய டூ-நாட்-டிஸ்டர்ப் (Do-Not-Disturb - DND) ஆப்பையும் அறிமுகப்படுத்தி உள்ளது, இது மொபைல் பயனர்கள் மார்க்கெட்டிங் அழைப்புகள் தொடர்பான தங்கள் விருப்பங்களை கஸ்டமைஸ் செய்ய உதவுகிறது.
சமீபத்தில் புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்வதாக, ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இனிமேல் அனைத்து புதிய சிம் கார்டுகளுக்கும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு, போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளும், அதன் வழியாக அதிகரித்து வரும் தவறான பயன்பாடுகளையும் நிறுத்தும் நோக்கத்தின் கீழ் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசாங்க அடையாள அட்டையின் கீழ் புதிய சிம் கார்டை வாங்க முடிந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு புதிய சிம் கார்டு இணைப்புக்கும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு தேவைப்படுகிறது. புதிய சிம் கார்டுகளை விற்பனை செய்யும் டெலிகாம் ரீடெயில் விற்பனையாளர்கள் இந்த செயல்முறையை முடிக்காமல் சிம் கார்டுகளை விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதோடு சேர்த்து, ஒவ்வொரு நபருக்கும் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் இந்த சிஸ்டம் ட்ராக் செய்ய உள்ளது மற்றும் வெவ்வேறு பெயர்களில் உள்ள மல்டிபிள் கனெக்ஷன்களும் சரிபார்க்கப்பட உள்ளது. எல்லாவற்றை விட முக்கியமாக "தேவைப்படும் பட்சத்தில்" புதிய சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்தை 10 வெவ்வேறு கோணங்களில் எடுத்து வழங்க வேண்டும். இப்படியாக புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்வதாக, ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் போலியான விவரங்களின் கீழ் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.