ARTICLE AD BOX
புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளா நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனித நகரமான பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் பிரம்மாண்டமான மகா யக்ஞம் நிறைவடைந்துள்ளது. ஒரு தேசத்தின் மனசாட்சி விழிப்படையும் போது, பல நூற்றாண்டு கால அடிமை மனோபாவ தடைகளை தகர்த்து சுதந்திரம் பெறும்போது அது புதுப்பிக்கப்பட்ட சக்தியின் தூய காற்றை சுதந்திரமாக சுவாசிக்கிறது.
இதன் பயன் ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெற்ற ஒற்றுமையின் மகா கும்பமேளா கண் கூடாக தெரிந்தது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின்போது வாழ்க்கையின் அனைத்துத் தரப்பினரும் ஒன்று கூடினர். இதில் தேசத்தின் மனசாட்சி விழிப்புற்றதை நாம் கண்டோம். இதுதான் ஒற்றுமையின் மகா கும்பமேளா. இந்த புனிதமான விழாவின் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் ஒன்று சேர்ந்தன. 45 நாட்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வருவதை நான் கண்ணுற்றேன்.
அனைத்து பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது என்ற ஒரே நோக்கத்துடன் வந்தனர். இதற்கு நிகரானது அல்லது உதாரணம் உலகில் வேறெங்கும் இல்லை. மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜூக்கு இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பதை எவரும் கற்பனை செய்யவில்லை. ஒற்றுமையின் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆர்வமிக்க பங்களிப்பை ஆன்மீக அறிஞர்கள் பகுப்பாய்வு செய்தால், இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொண்டிருப்பதையும் புதிய சக்தியுடன் இப்போது முன்னேறி வருவதையும் அறிவார்கள்.
இது புதிய சகாப்தத்தின் விடியல் என்று நான் நம்புகிறேன். கோடிக்கணக்கான மக்களிடம் ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தொலைநோக்கின் உருவகமாக இது இருந்தது. இப்போது இதே உணர்வுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் ஊசலாட்டமில்லாத நம்பிக்கையை நான் எப்போதும் கொண்டிருக்கிறேன்.
மகா கும்பமேளாவை காணும் போது எனது நம்பிக்கை பலமடங்கு வலுப்பட்டுள்ளது. 140 கோடி இந்தியர்கள் ஒற்றுமையின் மகா கும்பமேளாவை உலகளாவிய நிகழ்வாக மாற்றியிருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்த போதும், கங்கையின் நித்திய நீரோட்டம் போல் மகா கும்பமேளா ஏற்படுத்திய ஆன்மீக பலம், தேசிய மனசாட்சி, ஒற்றுமையின் விழிப்புணர்வு வரும் தலைமுறைகளுக்காக தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
* குறை இருந்தால் மன்னியுங்கள்
மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தனது அறிக்கையில், ‘‘இவ்வளவு பெரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வது எளிதான பணியல்ல. தெய்வீகத்தின் உருவமாக மக்களை நான் காண்கிறேன். அவர்களுக்கு சேவை செய்யும் எங்களின் முயற்சிகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் மக்களின் மன்னிப்பையும் நான் கோருகிறேன்’’ என கூறி உள்ளார்.
The post புதிய சகாப்தத்தின் விடியல் ஒற்றுமையின் மகா கும்பமேளா: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.