ARTICLE AD BOX
டெல்லி,
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசியதாவது,
மகா கும்பமேளா வெற்றிகரமாக நடைபெற முழு முயற்சி எடுத்த நாட்டு மக்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.
எண்ணற்ற பங்களிப்பின் முடிவே மகா கும்பமேளாவின் வெற்றி. இதற்கு பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம், நாட்டு மக்களுக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். வேற்றுமையில் ஒற்றுமை அனுபவத்தை மகா கும்பமேளா வெளிப்படுத்துகிறது. இதுதான் இந்தியாவின் வலிமை. ஒற்றுமையின் ஆன்மா நம்முள் ஆழமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது' என்றார்.
பிரதமர் மோடி பேசியபின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அவையில் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அமளியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் மோடி பேசியதை நான் ஆதரிக்க விரும்புகிறேன். கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் பண்பாடு. ஆனால், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவில்லை என்ற புகாரும் உள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்கின்றனர். வேலைவாய்ப்பு குறித்தும் பிரதமர் மோடி பேசவேண்டும்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக கட்டமைப்பில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது' என்றார்.