ARTICLE AD BOX
புதினைப் போல் சிந்திக்கிறாரா டிரம்ப்? 'தாராளவாத உலக ஒழுங்கு' முடிவுக்கு வருகிறதா?- ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிரிகோர் அட்டானேசியன்
- பதவி, பிபிசி ரஷ்ய சேவை
- ஒரு நிமிடத்துக்கு முன்னர்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யுக்ரேன் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ரஷ்யாவை உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக நடத்தி வந்தன.
தற்போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளார்.
ரஷ்யாவுடன் மீண்டும் உறவை நிறுவியுள்ள டிரம்ப், ரஷ்யாவை தாக்குதலை தொடங்கிய நாடு என்று அழைக்கவும் அல்லது யுக்ரேனை போரில் பாதிக்கப்பட்ட நாடாக அறிவிக்கவும் மறுத்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று, டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையே நடந்த காரசாரமான சந்திப்பின் போது இது மிகவும் பகிரங்கமாக வெளிப்பட்டது. அங்கு அவர்கள் யுக்ரேன் போரைப் பற்றியும் அதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பற்றியும் வெளிப்படையாக வாதிட்டனர்.
இதனால்,1990களில் தொடங்கிய " தாராளவாத உலக ஒழுங்கு" அழிந்து கொண்டிருக்கிறது போல சிலருக்கு தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவ்வாறு நடக்கிறதா?
- 'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன?
- யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - பிரிட்டிஷ் பிரதமர் குறிப்பிட்ட 4 அம்ச செயல் திட்டம் என்ன?
- ஸெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மிக தீவிரமாக தாக்கி பேசியது ஏன்? பின்னணியில் உள்ள தந்திரம் இதுவா?

தாராளவாத மேலாதிக்கத்தின் காலம்
'தாராளவாத உலக ஒழுங்கு' என்ற சொல், உடன்படிக்கைகள், கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவுகளின் அமைப்பை உள்ளடக்கியது. இதன் மையத்தில் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN), அதன் பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புகள் உள்ளன.
மேலும் 'தாராளவாத உலக ஒழுங்கு' என்பது, உலக வர்த்தக அமைப்பு (WTO), சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் தடையற்ற வர்த்தகம் போன்ற குறிப்பிட்ட மதிப்பீடுகளையும் குறிக்கிறது.
மேலும் மேற்கத்திய தாராளவாத ஜனநாயக அமைப்பு, அரசாங்கத்தின் சிறந்த மாதிரியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற கருத்தியல் நம்பிக்கையே இதிலுள்ள பொதுவான கருத்தாகும்.
சர்வதேச சட்ட மீறல்களை ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானங்கள் அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.
பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடைகளை விதிக்கலாம் அல்லது தீவிர சூழ்நிலைகளில் ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கலாம்.
நடைமுறையில், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவத் தலையீடுகள் பெரும்பாலும் ஐ.நாவின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இதை ரஷ்யா நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது.
2007 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகையில், "ஐ.நா. அனுமதித்தால் மட்டுமே ராணுவத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானதாகக் கருதப்படும். நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் துணை அமைப்பாக ஐ.நாவை நாம் மாற்றிவிடக்கூடாது'' என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார்.
2023 இல் வார்சாவில் பேசிய அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடற்ற அமைப்புக்கும் இடையிலான நடக்கும் "சுதந்திரத்திற்கான மாபெரும் போர்" என்று யுக்ரேன் போரை விவரித்தார்.
யுக்ரேனில் முழுமையான படையெடுப்பை தொடங்கியதன் மூலம், ரஷ்யா பல்வேறு நாடுகளின் பார்வையில் சர்வதேச சட்டத்தை மீறியது மட்டுமல்லாமல், பொதுவாக உலகளாவிய விவகாரங்கள் நிர்வகிக்கப்படும் விதத்தையும் சவால் செய்தது.
2014ல் இருந்து ஐ.நா.வின் ஒப்புதலின்றி, புதின் தானாகவே ராணுவ சக்தியை பயன்படுத்தியுள்ளார்.
யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு என்பது, பனிப்போருக்குப் பின்னர் விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கை வெளிப்படையாக மீறிய மிக மோசமான செயலாக, மேற்கத்திய கண்ணோட்டத்தில் கருதப்படுகின்றது.
"மூன்று முக்கியமான ஒழுங்குமுறைக் கொள்கைகள் மீறப்பட்டிருப்பதை நாங்கள் கண்டுள்ளோம்," என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்களின் பேராசிரியரான ஜி. ஜான் ஐகென்பெரி, பைனான்சியல் டைம்ஸிடம் தெரிவித்தார்.
"ஒன்று, பிராந்திய எல்லைகளை மாற்ற நீங்கள் பலத்தை பயன்படுத்தக் கூடாது. இரண்டாவதாக, பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை போர்க் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. மூன்றாவதாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று மிரட்டக்கூடாது.
முதல் இரண்டையும் செய்துள்ள புதின், மூன்றாவது அச்சுறுத்தலையும் விடுத்துள்ளார். எனவே இது விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கான உண்மையான நெருக்கடியாகும்," என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ், மேற்கத்திய அணுகுமுறை சர்வதேச சட்டங்களையும் ஐ.நா சபையின் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்று தெரிவித்துளார்.
1999ல் யுகோஸ்லாவியா மீதான நேட்டோவின் குண்டுவீச்சு, 2003ல் இராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பு மற்றும் 2008ல் கொசோவோ சுதந்திரத்தை அங்கீகரித்தது ஆகியவற்றை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி மேற்கத்திய நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக ரஷ்யா அடிக்கடி சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஐநா சாசனத்தில் உள்ள அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படுவதாகவும் ரஷ்யா கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
தாராளவாத உலக ஒழுங்கு குறித்து சமகாலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான சோதனைகளில் ஒன்றாக, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாடு பார்க்கப்படுகிறது.
பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ராணுவ ஆதரவை வழங்கியதற்காக பல நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இறந்தது குறித்து அமெரிக்கா அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றன.
"இது மிக வெளிப்படையான பாசாங்குத்தனம், இரட்டை நிலைப்பாடு," என்று துருக்கி நாடாளுமன்ற சபாநாயகர் நுமான் குர்துல்முஷ் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"இது ஒரு வகையான இனவெறியாகும், ஏனென்றால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் மக்களுக்குச் சமமாக, பாதிக்கப்பட்ட பாலத்தீன மக்களை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மனிதகுலத்திற்குள் ஒரு வகையான படிநிலையை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது."என்றும் அவர் தெரிவித்தார்.
தாராளவாத உலக ஒழுங்கு' என்பது, "அமெரிக்கா, அமெரிக்காவின் டாலர் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் ஆகியவற்றுடன் இணைந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விட, நேட்டோவும் அதன் கூட்டணிகளும் மேலோங்கி இருக்கின்றன. மொத்தத்தில், இதை அமெரிக்காவின் 'தாராளவாத மேலாதிக்கம்' என்று கருதலாம்'' என்கிறார் ஐகென்பெரி.
சீர்குலைப்பவராக மாறிய அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters
தற்போதுள்ள சர்வதேச ஒழுங்கை சவால் செய்ய விரும்பும் நாடுகள் வழக்கமாக "திருத்தல்வாத சக்திகள்" என்று முத்திரை குத்தப்படுகின்றன.
அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், சீனா மற்றும் ரஷ்யாவைக் குறிக்க நீண்ட காலமாக இந்த சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உலக அரங்கில் அமெரிக்க செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் இந்நாடுகள் செயல்படுகின்றன என்றும் வாதிடுகின்றனர்.
ஆனால் சமீப மாதங்களில், அமெரிக்காவே உலகின் முன்னணி திருத்தல்வாத சக்தியாக மாறியுள்ளது என்றும், வர்த்தகம், கூட்டணிகள் முதல் ஜனநாயக ஒற்றுமை, மனித உரிமைகள் பாதுகாப்பு வரை "தாராளவாத உலக ஒழுங்கின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும்" களைவதற்காக டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றும் பேராசிரியர் ஐகென்பெரி கூறுகிறார்.
"முந்தைய நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை தோல்விகளிலிருந்து, வெளிப்படையாக, கடந்த காலத்திலிருந்து எனது நிர்வாகம் தீர்மானமாக விலகுகிறது" என்று டிரம்ப் சமீபத்தில் கூறினார்.
அவரது குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட பிற தீவிர மாற்றங்களைப் போலல்லாமல், வெளியுறவுக் கொள்கையானது அதிபரின் அதிகாரத்தின் கீழ் வருவதால், நடாளுமன்றத்தாலும், நீதித்துறையாலும் இந்த மாற்றத்தைத் தடுப்பது கடினமாக இருக்கும்.
மேலும் அமெரிக்க நலன்களின் நோக்கில் அதை வடிவமைத்ததன் மூலம், ரஷ்யாவுடன் நல்லுறவை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நியாயப்படுத்தியுள்ளது.
"தொடர்ச்சியான மோதல்கள் ரஷ்யாவிற்கும், யுக்ரேனுக்கும், ஐரோப்பாவிற்கும் மோசமானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் மிக முக்கியமாக, இது அமெரிக்காவிற்கு மோசமானது" என்று சமூக ஊடகத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதிவிட்டார்.
இருப்பினும், டிரம்பின் ராஜ்ஜீய உறவு புரட்சி அவரது மிகக் குறைவான ஆதரவை பெற்ற கொள்கையாக உள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்பில் அமெரிக்கர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது குடியேற்றக் கொள்கைகளை ஆதரிப்பதாகத் தெரியவந்தது.
அதே சமயம் ரஷ்யா- யுக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலத்தீன மோதல் பற்றிய அவரது நிலைப்பாடு குறைந்த ஆதரவையே பெற்றுள்ளது.
இதற்கிடையில், மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் யுக்ரேனை ஒரு நட்பு நாடாக கருதுகின்றனர், கிட்டத்தட்ட பாதி பேர் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு சாதகமான கருத்தை வழங்கியுள்ளனர்.
டிரம்பின் ராஜ்ஜீய உறவு எழுச்சி

பட மூலாதாரம், Getty Images
"பிப்ரவரி 2025 இல், விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கை மாற்றக்கூடிய நாடாக இப்போது அமெரிக்காதான் அச்சுறுத்துகிறது" என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ரஷ்யா மற்றும் யூரேசியா ஆய்வுகள் ஆராய்ச்சியாளர் முனைவர் ஜூலி நியூட்டன் கூறினார்.
இதற்கான ஆதாரமாக, யுக்ரேனின் இயற்கை வளங்கள் மீதான கட்டுப்பாட்டிற்கான டிரம்பின் கோரிக்கைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் ரஷ்யாவுடனான உறவுகளை வெளிப்படையாக இயல்பாக்கிய விதம், அதிபர் ஸெலென்ஸ்கி மீது பொதுவெளியில் வாக்குவாதம் செய்தது மற்றும் ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி கட்சிகளை டிரம்பின் கூட்டாளிகள் ஆதரிப்பது ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.
யுக்ரேன் மீது முழு அளவில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய மூன்றாம் ஆண்டு நிறைவு நாளான கடந்த பிப்ரவரி 24 அன்று, ரஷ்யாவின் தாக்குதலையும், யுக்ரேனிய பிரதேசத்தை ஆக்கிரமித்ததையும் கண்டிக்கும் ஐ.நா பொது சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது.
இதற்குப் பதிலாக, "ரஷ்யா-யுக்ரேன் மோதலின் மூலம் நிகழ்ந்த துயரமான உயிர் இழப்புகளுக்கு" இரங்கல் தெரிவிக்கும் ஒரு மேலோட்டமான உரையை அமெரிக்கா தூதர்கள் முன்மொழிந்தனர்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பொருளாதார உறவுகளை மீட்டெடுப்பது குறித்து புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் அறிவித்தார்.
"டிரம்பின் ராஜ்ஜீயபுரட்சி ஹெல்சின்கி சாசனத்தின் கொள்கைகளை சிதைத்து, கூட்டாளிகளின் பார்வையில் அமெரிக்காவை எதிரியாக நிலைநிறுத்துகிறது" என்று நியூட்டன் கூறினார்.
1975 ஆம் ஆண்டின் ஹெல்சின்கி உடன்படிக்கை என்பது, அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கை ஆகும்.
பிராந்திய ஒருமைப்பாடு, எல்லைகளை மீறாத தன்மை மற்றும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையீடு செய்யக்கூடாது போன்ற கொள்கைகளை வலுப்படுத்துவதை, இந்த உடன்படிக்கைகள் நோக்கமாகக் கொண்டிருந்தன.
"19 ஆம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியவாதியான புதினைப் போலவே டிரம்ப் சிந்திக்கிறார்" என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ரஷ்யா நிபுணர் செர்கேய் ரட்சென்கோ கூறினார்.
மேலும் "ஐரோப்பாவிடம் குறிப்பிடத்தக்க பொருளாதார வலிமையும், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க தேவையான பொருளாதார வழிகளும் உள்ளன," என்று ரட்செங்கோ குறிப்பிட்டார்.
"டிரம்ப் புதினுடன் தனது உரையாடலை எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான உறவுகளை இயல்பாக்குவது குறித்து கற்பனை செய்வது கடினம்."
'தாராளவாத உலக ஒழுங்கு' முடிந்துவிட்டதாக இப்போதே அறிவிப்பது சரியானதாக இருக்காது என்று அட்லாண்டிக் கவுன்சிலின் யூரேசியா மையத்தின் ஷெல்பி மேகிட் கூறினார்.
மேலும் ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன, மேலும் யுக்ரேனில் ரஷ்யா போரை நிறுத்தினால் மட்டுமே அவை நீக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
"நாடுகளுக்கிடையேயான உறவுகளை இயல்பாக்கும் செயல்முறை மிக விரைவாகவும், ஆபத்தானதாகவும் இருக்கலாம் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாம் இன்னும் முழுமையாக அந்த நிலையை எட்டவில்லை," என்று மேகிட் கூறினார்.
"இறுதியில், உலக ஒழுங்கின் நீடித்த தாக்கம் என்பது, அதற்காக பயன்படுத்தப்படும் வழிமுறைகளை விட, போர் எப்படி முடிவு வருகிறது மற்றும் அமைதி எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதன் மூலம் தீர்மானிக்கப்படும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)