ARTICLE AD BOX
மனிதனுக்கு நோயை உண்டாக்குவதில் கொசுக்களுக்கும் அதிகம் பங்கு இருக்கிறது. இதன்மூலம் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால்தான் அவற்றை அழிப்பதற்கு ஒவ்வோர் அரசுகளும் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், பிலிப்பைன்சில் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ அல்லது கொன்றோ பிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில் இந்த புதுமையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தரும் தலா ஐந்து கொசுக்கள் அல்லது கொசு முட்டைகளுக்கு ஒரு பிலிப்பைன்ஸ் பிசோ (ரூ.1.50) சன்மானம் அளிக்கப்படும் என்று உள்ளூா் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், தாங்கள் பிடித்த கொசுக்களைக் கொண்டுபோய் கொடுத்து பணம் பெறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம். எனினும், இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் பணம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தேங்கவைத்து கொசுக்களை உற்பத்தி செய்யும் அபாயமும் ஏற்படும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். பிலிப்பைன்ஸில் கடந்த பிப்ரவரி 1 நிலவரப்படி, இந்த ஆண்டு மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம் எனக் கணக்கிடப்படுகிறது. முன்னதாக, நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கியூசானில் மட்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, குவேஸான் நகரில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் கடந்த வாரம் மிகவும் தீவிரமடைந்தது. அதன் தொடா்ச்சியாக, 9 புதிய பகுதிகளுக்கும் இந்த நெருக்கடி பரவும் என அதிகாரிகள் எச்சரித்தனா். இதன் காரணமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அடிஷன் ஹில்ஸ் கிராமத் தலைவர் கார்லிட்டோ செர்னல் தெரிவித்துள்ளார்.