ARTICLE AD BOX
பிறந்தேன் வரதராஜபெருமாள் அருளில்
காஞ்சி ஆனை கட்டித் தெருவில்
முதன் முதலில் பார்த்தபோது வரதர் கோபுரம்
மூவிரண்டு ஆறு வயதில், இருக்கிறது ஞாபகம்
அந்த உணர்ச்சியை எப்படி விவரிப்பது...?
உடலில் இனம் புரியாத ஒரு புல்லரிப்பு
என்ன ஒரு கம்பீரம்
என்ன ஒரு தெய்வீகம்
கிளிகளின் கூட்டம்
கூச்சல் ஆர்ப்பாட்டம்
வைத்திருக்க வேண்டும் அவைகள் எவ்வளவு கொடுத்து
குடியிருக்க கோபுரத்தில் இலவச அறைகள் எடுத்து!
தாண்டியதும் கோபுர வாசல் யானை கண்ணில் பட்டது
யார் அவன் நெற்றியில் நாமம் இத்தனை அழகாய் இட்டது?
தும்பிக்கையை ஆட்டி கொண்டு நின்றான் போல ஊஞ்சல்
வன மிருகம் அல்ல அவன் ஒரு வானுலக ஏஞ்சல்
உடல் தான் இருக்கு அவனுக்கு குன்று போல
உண்மையில் உள்ளத்தில் அவன் பசுங்கன்று
நூற்றுக்கால் மண்டபம் குளத்துக்கு முன் புரம்
ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சிற்பமும் அற்புதம்
நம்ப முடியவில்லை தோன்றியதா இது மண்ணிலிருந்து
இறங்கியது போல் இருந்தது அப்படியே விண்ணிலிருந்து !
நம்ப முடியவில்லை வடித்தார்கள் உளியால்
கிள்ளினால் சிற்பங்கள் கத்துவார்கள் போலிருந்தது வலியால்
அனந்தசரஸ் புஷ்கரணி குளம்
பெரிய ததும்பும் தண்ணீர் சதுரம்
தீர்த்தத்திற்கு என்ன ஒரு பிரத்யேக நிறம்
குதித்து அடித்துக் கொண்டிருந்தார்கள் பையன்கள் கும்மாளம்
ஏங்கினேன் முடியுமா தாவி நீந்த நம்மாலும்
படுத்திருக்கிறார் நீருக்குள் வரதர் அத்தி
குளப்படியில் அமர்ந்து கேட்டேன் அவரை பத்தி
குளத்தின் பக்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி
நுழைந்ததுமே 'என்ன ஒரு மன நிம்மதி'
சொல்லியபடி சுதர்ஷனை காட்டி
சேவிக்க சொன்னார் என் பாட்டி
'இவர் நம் குடும்ப மருத்துவராக்கும்
பார்வையில் இவர் பார்க்கும்
எல்லா வியாதிகளும் தோற்கும்'
அடுத்து போனோம் பார்க்க அருள்மிகு தாயார் பெருந்தேவி
அவர் பாதங்களில் மலர் தூவி
செய்தால் போதும் வரதரை நீ நேசிக்க
எல்லாம் தந்தருள்வார் வேண்டியதில்லை யாசிக்க
பாட்டி சொன்னது வைத்தது என்னை யோசிக்க
பிறகு நரசிம்மர் சன்னதி மலை அடிவாரம்
சாந்தமாய் லட்சுமியுடன் அமர்ந்த கோலம்
துளியும் இல்லை இரண்யனை கொன்ற கோபம்
கேட்பது போல் இருந்தது 'கேள் உனக்கென்ன வேணும்'
கொடுத்தார் பட்டர் பிரசாதம் நெய்யில் மிதக்கும்
பரவிற்று ஆனந்தம் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும்
நரசிம்மர் பிரசாதம் இல்லை வெறும் ஆகாரம்
அது ஒரு ஒளஷதம்
கடைசியாக படியேறி போனோம் வரதராஜ பெருமாளை காண
பார்த்தவுடன் இல்லை பாட்டிக்கு வாய் பேச தோண
அவதரித்தார் பெருமாள் நெருப்பிலிருந்து
அதனால் தான் இருக்கு முகம் புள்ளி புள்ளியாக
சொன்னார் முன்வந்து அர்ச்சகர் என்னிடம் தானாக
ராபர்ட் கிளைவ் தேவராஜனுக்கு தந்த மரகத லாக்கெட்டு
காண்பித்தார் அவர் எடுத்து மெனக்கெட்டு
கட்டான ஆணழகன் உடம்பு
கைகள் நான்கும் கரும்பு
வரதர் ஒரு மூர்த்தி சுயம்பு
பிடித்துப்போகும் வரதரை
பார்த்தவுடன் நாள்பட்ட நாத்திகனுகும் அவரை
சொன்னார் பாட்டி கண்ணில் நீர் திவலை
மலையிலிருந்து இறங்கி போனோம் மடப்பள்ளி
வைத்தார்கள் மந்தார இலையில் பிரசாதம் அள்ளி
இருந்தது பொங்கல் அமிர்தமாய்
உண்டேன் அபிர் மிதமாய்
தத்தி அன்னம் புளியோதரை
சாப்பிட்டேன் வயிறு முட்டும் வரை
'வெறும் பிரசாதம் இல்லை இச்சோறு
வரதரும் பிரசாதமும் இல்லை வேறு வேறு'
பாட்டி சொன்னார் அது உண்மைதான் நூற்றுக்கு நூறு!