ARTICLE AD BOX
விக் ஆன் ஸீ: நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.
முன்னதாக இணை முன்னிலையில் இருந்த பிரக்ஞானந்தா, 4-ஆவது சுற்றில் சக இந்தியரான லியோன் லூக் மெண்டோன்காவை வீழ்த்தினார். இதர இந்தியர்களில், பி.ஹரிகிருஷ்ணா - நெதர்லாந்தின் மேக்ஸ் வார்மெர்டாமை வென்றார். நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் - செர்பியாவின் அலெக்ஸி சரானாவுடன் டிரா செய்ய, அர்ஜுன் எரிகைசி - ஸ்லோவேனியாவின் விளாதிமீர் ஃபெடோசீவிடம் தோல்வி கண்டார்.
இதனிடையே, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - நெதர்லாந்தின் அனிஷ் கிரி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசதாரோவ் - சீனாவின் வெய் யி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரெஸ்ட் ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இதையடுத்து மாஸ்டர்ஸ் பிரிவில் 4 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஹரிகிருஷ்ணா 2-ஆம் இடத்திலும் (3), குகேஷ் 5-ஆம் இடத்திலும் (2.5), அர்ஜுன் எரிகைசி, லியோன் மெண்டோன்கா ஆகியோர் தலா 0.5 புள்ளிகளுடன் முறையே 13 மற்றும் 14-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
சேலஞ்சர்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சர்ஸ் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - துருக்கியின் எடிஸ் குரெலையும், ஆர்.வைஷாலி - உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்திலும், திவ்யா தேஷ்முக் 1.5 புள்ளிகளுடன் 11-ஆம் இடத்திலும் உள்ளனர்.