டெல்லி: ஒரு நாட்டின் மொத்த இறக்குமதிகளின் மதிப்பு மொத்த ஏற்றுமதிகளின் மதிப்பை விட அதிகமாக இருக்கும் போது அதனை வர்த்தக பற்றாக்குறை என்று அழைக்கிறார்கள். உதாரணமாக ஒரு நாடு 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தால் அங்கே 50 டாலர்கள் வர்த்தக பற்றாக்குறை இருக்கிறது என அர்த்தம்.
இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை பிப்ரவரி மாதம் 14. 05 பில்லியன் டாலர்கள் என குறைந்திருக்கிறது. இது ஜனவரி மாதம் 22.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. இறக்குமதிகள் குறைந்ததே இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கும் காரணம் என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வர்த்தக பற்றாக்குறை இந்த அளவிற்கு குறைந்தது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகிறது.

இதே காலகட்டத்தில் இந்தியாவின் வணிக ஏற்றுமதி மதிப்பு பிப்ரவரி மாதத்தில் 36.91 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏனெனில் இது ஜனவரி மாதம் 36.43 பில்லியன் டாலராகவே இருந்தது. வணிக இறக்குமதி மதிப்பு ஜனவரி மாதம் 59.42 பில்லியன் டாலராக இருந்து பிப்ரவரி மாதத்தில் 50.96 பில்லியன் டாலராக குறைவை கண்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் சேவைகள் இறக்குமதி 38.5 பில்லியன் டாலராக இருந்தது பிப்ரவரியில் அது 35.3 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது , ஜனவரி மாதத்தில் சேவைகளின் ஏற்றுமதி 18. 22 பில்லியன் டாலராக இருந்து பிப்ரவரி மாதத்தில் 16.5 பில்லியன் டாலர்கள் என குறைந்திருக்கிறது.
இது ஒரு விரைவான மதிப்பீடு தான் என்றும் இறக்குமதி சரிவு தொடர்பான விரிவான விவரங்களை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் வர்த்தக துறை அதிகாரி சத்யா ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி மதிப்பு 2.3 பில்லியன் டாலர்களாக குறைந்து இருக்கிறது. இது ஜனவரி மாதம் 2.68 பில்லியன் டாலராக இருந்தது.
அதேபோல கச்சா எண்ணெய் இறக்குமதி ஜனவரியில் 13.4 பில்லியன் டாலராக இருந்து பிப்ரவரியில் 11.8 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது போட்டி வரிகளை விதிக்க இருக்கிறது. இந்த சமயத்தில் தான் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை தொடர்பான இந்த புள்ளி விவரம் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்கா இவ்வாறு போட்டி வரிகளை விதித்தால் அதில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என ப்ளூம்பெர்க் நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்க்கும்போது இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 74 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆபரணங்கள் ,மருந்துகள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களாக இருக்கின்றன.