Ford in Chennai: சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையில் ஃபோர்டு நிறுவனம், கார் உற்பத்தி செய்யும் என எதிர்பார்த்த நிலையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஃபோர்டு கார் தயாரிக்கும் நிறுவனம்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்து வந்தது. இதன் மூலம் இரண்டு தொழிற்சாலைகளிலும் பல ஆயிரக்கணக்கான, வேலைவாய்ப்புகள் உருவாகி இருந்தன.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை படிப்படியாக சரியத் தொடங்கியது. தொடர்ந்து, தொழிற்சாலையில் கார் உற்பத்தியும் படிப்படியாக அந்த நிறுவனம் குறைத்து வந்தது.

தொழிற்சாலியை விற்ற ஃபோர்டு - Ford Exit In India

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை மூடியது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725 கோடி ரூபாய்க்கு, வாங்கியது. தற்போது இந்த நிறுவனத்தில் டாடா கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு

ஃபோர்டு தொழிற்சாலை இந்தியாவிலிருந்து வெளியேறியது மிகப்பெரிய, அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக சென்னை தொழிற்சாலையை பல்வேறு நிறுவனங்கள் வாங்க முயற்சி மேற்கொண்டன. கடைசி வரை எந்த நிறுவனமும் ஃபோர்டு நிறுவனத்தை வாங்கவில்லை. இறுதியில் தமிழ்நாடு அரசு ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

தமிழ்நாடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நேரடியாக ஃபோர்டு நிறுவன ஊழியர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் ஃபோர்டு நிறுவனம்

சென்னை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 900 கோடியிலிருந்து 2700 கோடி வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கும், திட்டத்தை கைவிட்டு விட்டது என செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையில் என்டேவர், எவரெஸ்ட் ஆகிய மின்சார கார்களை இங்கு உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவித்தனர். இதற்கான முதலீடுகள் அதிகம் தேவைப்படும் என்பதால், அந்த முயற்சிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது கார் என்ஜின்கள் மட்டும் தயாரிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின் வாங்க காரணம் என்ன?

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறிய போது, நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் விற்பனை மையங்கள் மூடப்பட்டன. தற்போது பராமரிப்பு நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எனவே, கார்களை உற்பத்தி செய்தால் ஏற்றுமதி மட்டும் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனாலே கார் இன்ஜின்களை மட்டும் தயாரிக்க ஃபோர்டு நிறுவனம் முன் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.