ARTICLE AD BOX
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றி தாக்கல் செய்யப்பட்ட இச்சட்ட மசோதா அன்று நிறைவேற்றம் செய்யப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும், பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்கட்சியினரும் ஆதரவு அளித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வெளியான தகவலின் படி, ஆளுநர் ஆர்.என்.ரவி பாலியல் குற்றங்கள் தொடர்பான தண்டனைகளுக்கு கடும் வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்க உள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு அந்த சட்டதிருத்தங்கள் தமிழ்நாட்டில் அமலாக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.