பாலஸ்தீனிய கிராமத்தில் சிக்கி தவித்த இந்திய தொழிலாளர்கள் மீட்பு

3 hours ago
ARTICLE AD BOX

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து பாலஸ்தீனத்திற்கு வேலை கிடைக்கும் என்பதற்காக சென்று இந்திய தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் தெரிய வந்துள்ளது.

ஆ-ஜெயிம் என்ற பாலஸ்தீனிய கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் இந்திய தொழிலாளர்கள் 10 பேரிடம், வேலை வாங்கி தருகிறேன் என உறுதிமொழி அளித்து, அவர்களை அழைத்து சென்றிருக்கிறார்.

இதன்பின்னர், அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், அவர்களால் இஸ்ரேலுக்கு திரும்ப முடியவில்லை. ஒரு மாதத்திற்கும் கூடுதலாக அவர்கள் பாலஸ்தீனிய கிராமத்திலேயே சிக்கி தவித்து வந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் மக்கள்தொகை மற்றும் குடியுரிமை அதிகாரிகள் நேற்றிரவு ஜெருசலேம் அருகே நடத்திய ஆய்வின்போது, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

இதுபற்றி இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், இந்திய கட்டுமான தொழிலாளர்கள் 10 பேரை இஸ்ரேலிய அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர்களை மேற்கு கரையில் இருந்து இஸ்ரேலுக்கு திரும்ப கொண்டு வந்தனர்.

இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், இஸ்ரேல் அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும்படி இஸ்ரேலிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.


Read Entire Article