பாரம்பரிய கலை ஆசான்களுக்கு பல்கலை கழக பாராட்டு விழா!

3 hours ago
ARTICLE AD BOX

பிப்ரவரி-23 , 2025 அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்த சென்னை பல்கலைக்கழக பவள விழா அரங்கில் ஓர் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்பந்தன், பறை இசைக் கலைஞர் வேல் முருகன் ஆகிய இருவருக்கும் இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதானது, இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழக  பாரம்பரிய நிகழ்த்துக் கலை ஆசான்களுக்கு தரப்பட்ட  பத்மஸ்ரீ விருதுகளாகும்.

அந்த இரு ஆசான்களையும் கௌரவிக்கும் வகையில் நாடகக் கலைஞர் போதிவனம் பதிப்பக நிறுவனர், நண்பர் கருணா பிரசாத், ஒரு மாபெரும் கலைஞர்களின் கூடுகைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அது மட்டுமல்ல, நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கண்ணப்ப சம்பந்தன்  குழுவினர் ‘வாலி மோட்சம்’ கூத்தையும் நிகழ்த்தினர்.

நிகழ்ச்சி பறை இசை நடனத்துடன் தொடங்கப்பட்டது. பறை இசை பயின்ற இளைஞர்கள் அந்த வளாகத்தின் திறந்த வெளியில் தமது திறமையைக் காண்பித்தார்கள். கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தளித்தார்கள். பறை ஆட்டம் என்பது எவ்வளவு நளினமானது, எவ்வளவு கடினமானது என்பதை அவர்களின் பாதங்களின் அசைவில் கண்டோம். வடக்கே ‘கதக்’ என்ற பாரம்பரிய நடனக் கலையிலும் பாத அசைவுகளே முதன்மையாக இருக்கும்.

தேனீர் இடைவேளைக்குப்பின் ஆசான் வேல்முருகன் குழுவினரின் தப்பாட்டம் நடைபெற்றது. கடினமான இந்த ஆட்டத்தையும் குழுவினர் புன்னகையுடனே ஆடினார்கள்.

பறையிசைக் கலைஞர் வேல் முருகன்                போட்டோ;சூர்யா

அதன் பிறகு அரங்கினுள் பாராட்டு விழா நடைபெற்றது.  கலைஞர்கள் இருவருக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பில் நினைவுப் பரிசுகள் அளிக்கப்பட்டன. தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை இணைப் பேராசிரியர் ஆழி வெங்கடேசன், இரு கலைஞர்களுக்கும் தான் உருவாக்கிய அருமையான சிற்பங்களைப் பரிசளித்தார்.

பல்துறை கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரங்கை நிறைத்தார்கள். வந்திருந்த கலைஞர்களில் பலரும் இந்த இரு ஆசான்களிடமும் பயிற்சி பெற்றவர்களாக இருந்ததால், மேடை ஏறி தம்முடைய பார்வையிலிருந்து அவர்களை பாராட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சி நான் இது வரை கண்டிருக்கும் எத்தனையோ  நிகழ்ச்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மகிழ்வான நிகழ்ச்சி என்று சொல்வேன். ஏனென்றால், வரலாற்றில் முதல் முறையாக கூத்து மற்றும் பறை இசைக் கலைஞர்களுக்கு பரிசளிக்கப்பட்டது மட்டுமன்றி,  அவர்கள் பரிசு வாங்கும் முன்பே அதனை சக கலைஞர்கள் கொண்டாடிக் குதூகலப்படுத்திய நிகழ்ச்சியும் இதுவே முதல் முறை என்று  கருதுகிறேன்.

நண்பர் கருணா பிரசாத் ‘கூத்துப்பட்டறை’ உருவாக்கிய நடிகர். உடலில் எலும்புகளே இல்லையோ என்று ஐயுறும் அளவுக்கு அவரது உடல் ரப்பர் போல வளையும் அதிசயத்தைக் கண்டிருக்கிறேன். அண்மையில் அவர் இயக்கிய ‘நான் புதுமைப்பித்தன்’ நாடகம் அரியதோர் படைப்பு. அதனைக் காணும் பேறு எனக்கும் கிட்டியது.  அது மட்டுமன்றி ‘போதி வனம்’ என்கிற பதிப்பகத்தைத் தொடங்கி மிக முக்கியமான நூல்களை கருணா பிரசாத் பதிப்பித்து வருகிறார். நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பல நூல்களை போதிவனம் பதிப்பித்துள்ளது. அவர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து  அறிவித்தபின், பிற கூத்துப்பட்டறை கலைஞர்களும், அவரது பெருஞ்செல்வமான  நண்பர்களும் இந்த முயற்சியில் அவருக்கு உதவி இருக்கிறார்கள்.

இறுதி நிகழ்வாக திறந்தவெளியில் மின்னொளியில் ‘வாலி மோட்சம்’ கூத்து நடைபெற்றது. ஆசான் புரிசை கண்ணப்ப சம்பந்தனும், அவரது குழுவினரும் மிகச் சிறப்பாக இந்தக் கூத்தை நடத்தினர். சென்னை நகரில் புரிசையைச் சேர்ந்த குழுவினர் நடத்திய கூத்தினைக் காண்கின்ற  அருமையான அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது.

தொடக்கத்திலேயே பறை இசையும், தப்பாட்டமும் கண்டு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த எல்லோருக்கும், இந்தக் கூத்து ஒரு இனிய அனுபவத்தைப்  பரிசாக அளித்தது.

அழிந்து கொண்டிருக்கும் நமது பாரம்பரிய கலைகளை மீட்டு உயிர்ப்புடன் வைத்திருக்கும் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதளிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை மாணவர்கள் குத்தாட்டம் போடுகின்ற வேதனையான காட்சிகளை நாம் காண நேர்கிறது.  நமது பாரம்பரிய கலைகளில் எவ்வளவு நளினமான இசையும் நடனமும் இருக்கிறது என்பதை சொல்லிக் கொடுத்தால், அவர்கள் நிச்சயம் இந்தக் கலைகளை மிகுந்த விருப்பத்துடன் கற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. கல்வித்துறை இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு  செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

முதல் முறையாக மத்திய அரசு பாரம்பரிய கலைஞர்களுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்திருப்பதை ஒரு தொடக்கமாகக் கொண்டு, பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நமது பாரம்பரிய கலைகளை பாடத்திட்டத்தில் இணைத்து, கலைஞர்களுக்கு கௌரவமும், வாழ்வாதாரமும் கிட்டும்படி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என்று இந்நிகழ்ச்சி பறையறைந்து கூறியுள்ளது!

கட்டுரையாளர்; அமரந்தா

எழுத்தாளர்

Read Entire Article