பெங்களூரு: பலரும் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுக்கு பிடித்த துறையில் ஒரு இடத்தை எட்டி விட வேண்டும் என்றுதான் பயணம் செய்கின்றனர். சில சமயங்களில் குடும்ப சூழல்கள் காரணமாக தங்களுக்கு கிடைத்த வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகின்றனர். அப்படியே சென்றாலும் சிலர் தொடர்ந்து தங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்தையும் தொடர்கின்றனர்.
அப்படித்தான் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் பகலில் ஆட்டோ ஓட்டுனர் ஆகவும் இரவில் டென்னிஸ் பயிற்சியாளராகவும் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தில் மனிதவளத்துறை மேலாளராக பணிபுரிந்து வரும் காயத்ரி என்பவர் அண்மையில் பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனரின் இருக்கைக்குப் பின்னால் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்ததாம்.

அதில் நான் தொழில் முறை டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் ,யாருக்காவது டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி தேவைப்பட்டால் என்னுடைய நம்பரை தயவு செய்து பகிருங்கள் நன்றி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆட்டோ ஓட்டுனரான குருமூர்த்தி தன்னுடைய தொலைபேசி எண்ணையும் அதில் பதிவு செய்துள்ளார்.
இதனை தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி தன்னுடைய இந்த ஆட்டோ பயணம் தனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தந்து இருப்பதாக பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டரை கண்ட உடன் அவர் ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்தியுடன் கலந்துரையாடி இருக்கிறார். அப்போதுதான் குருமூர்த்தி இதற்கு முன்பு கர்நாடக மாநில டேபிள் டென்னிஸ் குழுவின் முழு நேர பயிற்சியாளராக செயல்பட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது.
ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இவருடைய பயிற்சியாளர் பணிக்கு சிக்கல் ஏற்படவே தன்னுடைய நிதி நிலைமையை சீர் செய்வதற்காக ஆட்டோ ஓட்ட தொடங்கி இருக்கிறார். பகலில் ஆட்டோ ஓட்டுநராகவும் இரவு நேரத்தில் டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணியை தொடர்கிறார்.
பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி நமக்கு பல்வேறு வாழ்க்கை பாடங்களை கற்றுத் தருகிறார் என அவர் பதிவு செய்துள்ளார். அவருடன் நிகழ்ந்த இந்த கலந்துரையாடலில் ஒரு நபரால் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார். பெங்களூரு பகுதியில் இருக்கும் யாருக்காவது டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு பயிற்சியாளர் தேவைப்படுகிறது என்றால் கண்டிப்பாக குருமூர்த்தியை தொடர்பு கொள்ளுங்கள் என அவருடைய தொலைபேசி எண்ணை காயத்ரி வெளியிட்டுள்ளார் .
இதுபோல பன்முக தன்மை கொண்ட தனி நபர்களை பிரபலமாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என காயத்ரி கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூருவில் இதுபோல ஆட்டோ ஓட்டுநர்கள் முன் உதாரணமாக மாறுவது இது மட்டும் முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு கூட ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காக நிதி திரட்டி வருவதாக தன்னுடைய ஆட்டோவில் போஸ்டரை ஒட்டி இருந்தார் அந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.