ARTICLE AD BOX
திருப்போரூர்: உளுந்தூர்பேட்டையில் பாட்டியின் சாவுக்கு சென்ற வாலிபர், திருப்போரூர் கோயில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த மூட்டைக்காரன் சாவடி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது, மகன் தாமோதரன் (24). இவர், சென்னையில் உள்ள தனியார் கார்பன் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
அந்த, நிறுவனத்தின் மற்றொரு பிரிவு திருப்போரூர் அருகே காயார் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தாமோதரன் காயார் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தனது உறவுமுறை பாட்டி உளுந்தூர் பேட்டையில் இறந்து விட்டதாகவும், அதற்கு மோட்டார் சைக்கிளில் செல்வதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனிடையே, நேற்று காலை திருப்போரூர் கோயில் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக வந்த தகவலை அடுத்து திருப்போரூர் போலீசார், அங்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து குளத்தின் மையப்பகுதியான நீராழி மண்டபம் அருகில் மிதந்து கிடந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கரையின் ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினை அடையாளம் கண்ட போலீசார், இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தது.
இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர் மது போதையில் குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
The post பாட்டியின் சாவுக்கு சென்ற வாலிபர் கோயில் குளத்தில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.