தன்னுடைய பாட்டி, தம்பி, காதலி உள்பட 5 பேரை கேரள இளைஞர் ஒருவர், கொடூரமாக கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது. குறிப்பாக, ஒவ்வொருவரின் வீட்டுக்கும் தேடிச் சென்று, அவர்களை சுத்தியால் அடித்து கொலை செய்த இளைஞர் இறுதியில் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். இந்த கொலைகள் நடந்ததற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

கேரளாவை அதிரவிட்ட கொலைகள்:

சமீப காலமாக, கொலை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குடும்பத்தினரையே கொடூரமாக கொலை செய்யும் போக்கும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் கேரளாவில் நேற்று நடந்துள்ளது.

பாட்டி, தம்பி, காதலி, சித்தப்பா மற்றும் சித்தி என ஐவரை கொலை செய்துள்ளார் 23 வயது அஃபான். தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வெஞ்சாரமூட்டில் அமைந்துள்ள பாங்கோடு கிராமத்தில் முதல் கொலை நடந்துள்ளது. அங்கு அவர் தனது தந்தைவழி பாட்டி சல்மா பீவியைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இளைஞரின் வெறியாட்டம்:

பின்னர், அவர் மற்றொரு கிராமமான எஸ்.என். புரம் சென்று, தனது தந்தை ரஹீமின் சகோதரர் லத்தீப், லத்தீப்பின் மனைவி ஷாஹிதா ஆகியோரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், புல்லம்பராவில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்று, தனது 13 வயது தம்பி அப்சானையும், காதலி ஃபர்சானா என்ற பெண்ணையும் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தாயார் ஷெமியையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இறுதியில், வெஞ்சாரமூடு காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் சென்று கொலைகளை ஒப்புக்கொண்டுள்ளார் அஃபான். புற்றுநோயுடன் போராடி வரும் அவரது தாயார் ஷெமி, காயங்களுடன் உயிர் பிழைத்து தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவனந்தபுரம் (ஊரகம்) எஸ்.பி. கே.எஸ். சுதர்சன் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து விரிவான வாக்குமூலம் பெற்ற பின்னரே கொலைக்கான நோக்கத்தை உறுதிப்படுத்த முடியும். நிதி நெருக்கடி இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

தங்கம் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். குற்றம் நடந்த இடத்திலிருந்து ஒரு சுத்தியல் மீட்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. தனது கொலைவெறியின் முடிவில் விஷம் குடித்ததாகக் கூறி அஃபான் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை செய்த அஃபான் போதைப்பொருளை உட்கொண்டதற்கான சான்றுகள் உள்ளன" என்றார்.