ARTICLE AD BOX

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய நிலையில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. ஆனால், முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம் என பலர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியது அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது. திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம். டாஸ்மாஸ் ஊழலுக்கு எதிராக பாஜகவினர் போராடுவதை நாங்கள் வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.” என்று தெரிவித்தள்ளார்.
மேலும், “பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம். அதனை பாராட்டலாம். மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், அவைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. ” என்று தெரிவித்த திருமா, ” அரசியல் காரணங்களுக்காக பாஜகவினர் போராடினால் அவர்களால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ” என திருமாவளவன் பேசினார்.