ARTICLE AD BOX
பெஷாவர்: பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு என்ற இடத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இதனருகிலுள்ள மசூதி ஒன்றில் நேற்று முன்தினம் மாலை புனித ரமலான் மாதத்தையொட்டி முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். சிலர் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய இரண்டு கார்களை ராணுவ தளம் மீது மோதி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சாலையில் சென்று கொண்டிருந்த அப்பாவி குழந்தைகள் பெண்கள் உள்பட பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து தற்கொலை படை தீவிரவாதிகள் சிலர் ராணுவ தளத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் அமைப்புடன் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-பர்சான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தற்கொலை படை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
The post பாகிஸ்தான் ராணுவ தளம் மீது இரட்டை தற்கொலை படை தாக்குதல்; 12 பேர் பலி: 30 பேர் காயம் appeared first on Dinakaran.