ARTICLE AD BOX
பலுச்சிஸ்தான் மாநிலத்தின் நவுஷ்கி என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் வந்த கான்வாய் மீது பலுச்சிஸ்தான் விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். குவெட்டாலில் இருந்து டஃப்டானுக்குச் சென்ற பாதுகாப்புப் படையினரின் கான்வாயில் 7 பேருந்துகள் மற்றும் 2 வாகனங்கள் வந்துள்ளன. இந்த தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 22 பேர் படுகாயமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச்சிஸ்தான் விடுதலைப் படையினர் கூறியுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தினரோ 5 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் ராணுவ செய்திதொடர்பாளர், போராளிக்குழுவில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் பலுச் விடுதலை ராணுவம், மஜீத் படைப்பிரிவு மற்றும் ஃபதே படையின் சிறப்புப் பிரிவு என மூன்று தரப்பினரின் ஒருங்கிணைந்த தாக்குதல் என்று WION செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு பலுச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
IED வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தைக் கொண்டு ஒரு பேருந்தின் மீது மோதப்பட்டுள்ளது. மற்றொரு பேருந்து RPG எனப்படும் குண்டுகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த இரு வெடிப்புகளுக்குப் பிறகு ஃபதே படையினர் கான்வாயை நெருங்கி, கான்வாயை சுற்றி வளைத்து ராணுவ வீரர்கள் மேல் தாக்குதலில் ஈடுபட்டதாக பலுசிஸ்தான் விடுதலைப்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகள் கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனாலும், இந்தப் பகுதி போதிய வளர்ச்சி இல்லாமல் உள்ளது. எனவே, இப்பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசு மற்றும் அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். பலுச்சிஸ்தான் பல ஆண்டுகளாகவே பாதுகாப்புப் பற்றாக்குறையால் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பலுச்சிஸ்தான் விடுதலையடைய வேண்டி பலுச்சிஸ்தான் விடுதலைப்படை உள்ளிட்ட பல ஆயுதக்குழுங்கள் செயல்பட்டு வருகின்றன. 2006 ஆம் ஆண்டு முதல் இந்த குழுவை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தடைசெய்துள்ளன.
ஆரம்பத்தில் சிறு சிறு தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த பலுச்சிஸ்தான் விடுதலைப் படையின் போர் திறன் தற்போது அதிகரித்துள்ளதாக the print ஊடகம் தெரிவித்துள்ளது. அவர்களால் பெரிய ராணுவ இலக்குகளைக் கூட தாக்கும் திறன் கொண்டு விளங்குவதாக the print தெரிவித்துள்ளது. பலுச்சிஸ்தானில் நடைபெறும் தாக்குதல்கள் தொடர்பாக பாகிஸ்தானின் தேசிய ஊடகங்கள் போதிய செய்திகளை வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஏனெனில் தாக்குதல் தொடர்பான தகவல் எல்லாம் தாக்குதல் நடத்தியவர்கள் வெளியிடும் செய்திகளாகவே உள்ளன. தற்போது நடந்த தாக்குதல் தொடர்பாகக் கூட மஜீத் படைப்பிரிவுதான் காட்சிகளை வெளியிட்டுள்ளது.
முன்னதாக பலுச்சிஸ்தான் விடுதலைப்படையினர் ஓடும் ரயிலுடன் ராணுவத்தினரை கடத்தியிருந்தனர். இதில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகள் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் ரயிலில் இருந்த 214 ராணுவத்தினரையும் கொன்றுவிட்டதாக பலுச் விடுதலை படையினர் தெரிவித்திருந்தனர்.