பல நிறங்களில் இலைகளைக் கொண்ட செடிகளும் அழகுதானே!

3 hours ago
ARTICLE AD BOX

வீட்டுத் தோட்டத்தை அழகாக்க பூச்செடிகள் தான் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களைக் காண்பதற்கு ரம்மியமாக இருக்கும். பூச்செடிகள் மட்டும் தான் தோட்டத்தை அழகாக மாற்றுமா என்ன? சில வகையான அழகுச் செடிகளும் தோட்டத்தையும், வீட்டையும் வண்ணமயமாக மாற்றும். அப்படிப்பட்ட செடிகளைத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

நாம் வாழும் வீட்டை பசுமையாக்க நினைத்தால், அதற்கு தோட்டம் அமைப்பது ஒன்றே சிறந்த வழி. இன்றைய காலகட்டத்தில் தோட்டத்தில் காய்கறி மற்றும் பூச்செடிகளைத் தான் அதிகம் வளர்க்கின்றனர். ஏனெனில் இவை நமக்கு நிச்சயமாக பலன் தரக்கூடியவை. இது தவிர்த்து புதுமையான மற்றும் வண்ணமயமான செடிகளை வளர்க்கவும் சிலர் நினைப்பதுண்டு. அதற்கேற்றவாறு பல நிறங்களில் இலைகளைக் கொண்ட செடிகளும் உள்ளன.

1.அக்லோனெமா (Aglaonema): சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் வீட்டுத் தோட்டத்திற்கு அழகு சேர்க்கிறது அக்லோனெமா செடி. இலைகள் மட்டுமே உள்ள இச்செடியை சூரிய ஒளியில் வளர்த்தால், மேலும் அழகாகத் தெரியும். குறைந்த பராமரிப்பே போதுமானது என்பதால், இந்தச் செடியை வீட்டிற்குள் தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம். அவ்வப்போது வாடிய இலைகளை கவாத்து செய்து வந்தால் போதுமானது. ஓராண்டு கழித்து மிக எளிதாக இச்செடியை வேறு இடத்திற்கு மாற்ற முடியும்.

2. வாண்டரிங் ஜூ (Wandering Jew): ஊதா நிற இலைகளைக் கொண்ட வாண்டரிங் ஜூ செடிகளை தோட்டத்திலும், வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம். இதன் கிளைகளை எடுத்து மண் இன்றி தண்ணீரில் வைத்தால் கூட நன்றாக வளரும்.

3. ஸ்னேக் செடி (Snake Plant): நீண்ட வாள் வடிவ இலைகளுடன் காணப்படும் ஸ்னேக் செடியானது, தூசிகளைப் போக்க வல்லது. இதன் இலைகளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்தாலே, புதிய நாற்றுகளை உருவாக்கி விடலாம் என்பது கூடுதல் அம்சமாகும். அதிக நாட்களுக்கு இதன் இலைகள் சேதமடையாமல் இருக்கும் என்பதால், தோட்டத்தில் வளர்க்க ஏற்றதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ரோஜா செடி பூத்துக் குலுங்க இப்படி ஒரு ஐடியாவா?
Beautiful Plants

4. மணி பிளாண்ட் (Money Plant): இன்று பலரது வீடுகளில் வளர்க்கப்படும் மணி பிளாண்ட், வீட்டிற்கு செழிப்பைக் கொண்டு வரும் என கூறப்படுகிறது. உட்புறத் தாவரமான இச்செடியை தண்ணீரிலேயே வளர்க்கலாம். அதிவிரைவாக வளரக்கூடிய செடி என்பதால், இதற்கான பராமரிப்பும் மிகவும் குறைவு தான்.

5. கோலியஸ் (Coleus): கேரளாவில் அதிகளவில் வளர்க்கப்படும் கோலியஸ் செடியை நிழலிலும், சூரிய ஒளியிலும் வளர்க்கலாம். பல வண்ணங்களில் இதன் இலைகள் இருப்பது இச்செடியின் சிறப்பம்சமாகும். குறிப்பாக சூரிய வெளிச்சத்தில் இதன் இலைகள் இன்னும் அழகாக காணப்படும்.

6. ஸ்பைடர் செடி (Spider Plant): உட்புறத் தாவரமாக வளர்க்கப்படும் ஸ்பைடர் செடி, வளிமண்டலத்தை சுத்தப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது உயரமாக வளரக்கூடிய வெள்ளை மற்றும் பச்சை நிற இலைகளைக் கொண்ட தாவரமாகும். இச்செடியின் சிறிய தண்டுக்கு தண்ணீர் ஊற்றினாலே நன்றாக வளரும் தன்மை கொண்டது.

Read Entire Article