ARTICLE AD BOX
அடுத்தவரின் துன்பத்தைக்கண்டு நகைக்கிற இயல்பு நம் மனங்களுக்குள் எப்போது நுழைந்தது..? பாதிக்கப்பட்டவர்களின் ரணம் ஆறுமுன், 'நான் எவ்ளோ பெரிய நியாயக்காரன் தெரியுமா' என்பதை நிரூபிக்கிற அளவுக்கு இதயம் கல்லானது எப்போது..? பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் பலருடைய மனமும் பரிதவித்துக்கொண்டிருக்கிற வேளையில், பாதிக்கப்பட்டவர்களையே கேலி, கிண்டல் செய்பவர்களை, நடந்த குற்றத்துக்கு அவர்களையே காரணமாக்குபவர்களை உணர்வற்று நாம் கடக்க ஆரம்பித்தது எப்போது..? அவர்களின் கூற்றுக்கு சற்றும் கூச்சமின்றி முட்டுக்கொடுப்பவர்களின் விமர்சனங்களை இலகுவாக கடக்க ஆரம்பித்தது எப்போது..? அடுத்தவரின் துன்பத்தில் தன்னை நிறுத்தி அவர்களுக்காக பதறிய, உதவ ஓடிய அந்த உணர்வை நாமெல்லாம் இழந்ததுபோனது எப்போது..? எப்போது..?

''அந்தக் குழந்தையே தப்பா நடந்திருக்கு. அந்தப்பையன் முகத்துல துப்பி இருக்கு. நாம ரெண்டு பக்கமும் பார்க்கணும்.'' - பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, செங்கல்லால் மண்டை உடைக்கப்பட்டு, கண்கள் பிதுங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற மூன்றரை வயது பெண் குழந்தையிடம் தன்னுடைய நடுநிலைப் பண்பை?! வெளிப்படுத்துகிறார், அதன் பாட்டன் வயதில் இருக்கும் ஒரு மாவட்ட ஆட்சியர். இதைவிட கொடுமை, ''அந்த மாவட்ட ஆட்சியர் சொன்னது தவறுதான். ஆனால், சிறார் குற்றங்களைத் தடுப்பதற்கு பெற்றோரை தயார்படுத்த வேண்டுமென்கிற நல்ல அறிவுரையையும் அந்தப் பேச்சில் அவர் சொன்னாரே'' என்று, சிலர் கள யதார்த்தத்தை சொல்கிறோம் என தங்கள் மேதமையை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
'அது குழந்தையே என்றாலும் பெண்; நான் ஓர் ஆண். அதனால், அந்தக்குழந்தைக்கு நான் பாலியல் வன்புணர்வு செய்து தண்டனை தருவேன்' என்கிற ஆணாதிக்க மனநிலைக்கு ஒரு மாவட்ட ஆட்சியர் நடுநிலை நியாயம் சொல்கிறார். சமூகவலைத்தள மேதாவிகள், 'அந்த இலையின் ஓரத்தில் ஒரு துண்டு இனிப்பு இருந்ததே... அதை கவனித்தீர்களா' என்று கொதித்துக்கிடக்கும் சமூகத்திடம் கேள்விக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம், எரிவது அடுத்தவர் வீட்டுக்கூரைதானே என்கிற அடிமனது ஆசுவாசம்தான் காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா..?
பாலியல் வன்கொடுமை... பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் ஏன் புகார் அளிப்பதில்லை?மனது சரியில்லை என்று கோயிலுக்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, கொன்று வீசிய அர்ச்சகர்கள். இந்த செய்தியின் பின்னூட்டத்தில், 'புருஷன்கூட சண்டைபோட்டுட்டு எதுக்கு கோயிலுக்குப்போனே; பூசாரிங்க தியானம் செய்ய சொன்னா செஞ்சிடுவியா' என எத்தனையெத்தனை வக்கிர அறிவுரைகளும் கேள்விகளும்... குடும்பத்தில் பிரச்னை வந்தால், கோயிலுக்கு செல்வதும், தான் நம்பும் தெய்வத்திடமும் அங்கு அறிமுகமானவர்களிடமும், உள்ளக்குமுறலை இறக்கி வைப்பது நம் குடும்பங்களுக்கு புதிதல்லவே... வன்புணர்வு செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி சிலர் போராட்டம் செய்துகொண்டிருக்கிறார்களாம். அவர்களுடைய வீச்சமடிக்கும் மனநிலைக்கு சற்றும் குறைந்ததல்ல, உடம்பெல்லாம் பற்குறிகளுடன் பெண்ணுறுப்பு சிதைந்துபோய் இறந்தவளின் உடலின்மீது தங்களுடைய நியாங்களை எழுதும் சிலருடைய மனநிலையும்...
நீ ஏன் உன் ஆண் நண்பனோட சினிமாவுக்குப் போனே? அண்ணான்னு கூப்பிட்டிருந்தா அவங்க உன்னை பாலியல் வன்புணர்வு செஞ்சிருக்க மாட்டாங்க... ராத்திரியில வெளியே போனா இப்படித்தான் நடக்கும்... எங்க வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் இப்படி போக மாட்டாங்க... மக்கள் தொகை அதிகமாக இருக்கும் ஒரு மாநிலத்தில் பாலியல் வன்முறை நடப்பது பெரிய விஷயமல்ல.பாலியல் வன்கொடுமைகள் நடந்தபிறகு நம் நாட்டில் உதிர்க்கப்பட்ட நல்முத்துக்கள்(?) இவையெல்லாம். எந்த ரெளத்திரமுமின்றி இவற்றைக் கடந்துகொண்டிருப்பதற்கு, கொள்ளையடிக்கப்பட்டது நம் வீட்டில் அல்ல என்கிற நிம்மதிதான் காரணமென்று எடுத்துக்கொள்ளலாமா?
மேகா ஆகாஷ் முதல் அனிதா சம்பத் வரை... பாலியல் சீண்டல்களைச் சமாளித்தது எப்படி? #SpeakUp'வயசுக்கு வந்து குச்சுல உக்காந்திருக்கற புள்ளையத் தூக்கிட்டுப் போயா கற்...சேன்.' இதை செய்தியாளர் சந்திப்பில் ஒரு ஆண் சொல்ல, சுற்றிலும் இருக்கும் பெண்கள் உள்பட யாரும் அத எதிர்க்கல. 'அவங்க உதவி கேட்டத கேட்டா நீங்ககூட காசு கொடுப்பீங்க' என்று சொல்ல, அவரைச் சுற்றியிருக்கிற பெண்கள் உட்பட அனைவரும் சிரிக்கிறார்கள். 'ஒரு நடிகை தெருத்தெருவாக என்னை கேவலப்படுத்தியபோது யாராவது கேட்டீர்களா' என்கிறார் . அதற்கும் யாரும் நியாயமான எதிர்வினை ஆற்றவில்லை. 'கற்ப....பு' என்கிற வார்த்தை எத்தனை ஆணாதிக்கம் நிறைந்தது என்பது இன்னமும் இவர்களை எட்டவில்லையா?
'நீங்ககூட காசு கொடுப்பீங்க' என்பதன் பின்னால் இருக்கிற கேலி புரிந்து சிரித்தவர்களுக்கு, இந்த அழுகலான ஆயுதத்தை எந்தப் பெண்ணுக்கு எதிராகவும் பயன்படுத்த முடியும் என்பது புரியவில்லையா? தான் இருந்த அதே துறையில் பணியாற்றிய பெண்ணை 'ஒரு நடிகை' என்று அழுத்தம் கொடுத்து இழிவு செய்ய முயல்வது, மல்லாந்து படுத்து உமிழ்வது என விளங்கவில்லையா? இத்தனை மழுங்கலுக்குப் பின்னணியில், அந்தப்பெண் எங்களைச் சேர்ந்தவள் அல்ல என்கிற அலட்சியம்தான் காரணமென்று எடுத்துக்கொள்ளலாமா?
பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை... ரயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை... சொந்த வீட்டுக்குள் பாலியல் வன்கொடுமை... பக்கத்து வீட்டு நபர் செய்த பாலியல் கொடுமை... மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சுற்றுலா பயணிக்கு பாலியல் வன்கொடுமைஇதற்கெல்லாம் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்..? பாதிக்கப்பட்டவர்களும் நம்முடன்தான் வாழ்கிறார்கள். குற்றமிழைத்தவர்களும் இதே சமூகத்தில்தான் இருக்கிறார்கள். இத்தனை உயிர்பலிகளுக்குப் பிறகும், குழந்தைகளுக்கு நல்ல தொடுகை, கெட்ட தொடுகை சொல்லிக்கொடுத்து உன்னை நீ தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென பாடம் எடுக்கப் போகிறோமா..? அல்லது குற்றமிழைத்தவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவாக எழுகிற சில குரல்களுக்கு எதிராகவும் நம்முடைய கனத்த மெளனத்தைக் கலைக்கப்போகிறோமா..? அந்த ஆண் என் தகப்பன், என் கணவன், என் மகன், என் உடன் பிறந்தவன், என் தலைவன் என்று பொறுத்துக்கொண்டும் நகைத்துக்கொண்டும் இருந்தோமென்றால், பக்கத்து வீட்டில் பற்றியெரிகிற தீ நம் வீட்டிலும் பரவும் நாள் வரும். அதற்கு நகைப்பவர்களை பாதிக்கப்பட்டவர்களாய் காணும் தருணம், கொடினினும் கொடிது!