ARTICLE AD BOX
பரிதாபமான நிலையில் அமெரிக்கா... ஐடி பங்குகளில் முதலீடு செய்ய போறீங்களா உஷாரா இருங்க..
இந்திய பங்குச் சந்தைகள் நிலவரம் தற்போது கவலைக்கிடமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் ஐடி நிறுவன பங்குகளின் விலை 28 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் நுகர்வோர் உணர்வு சரிவு கண்டுள்ள செய்தி இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான இந்த நேரத்தில், ஐடி துறையில் நிலவும் சாத்தியமான கவலைகளை எடுத்துக்காட்டி இந்த துறை பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில், மிக்சன் பல்கலைக்கழகத்தின் நுகர்வோர் உணர்வு குறியீடு கடந்த பிப்ரவரி மாதத்தில் 64.7 சதவீதமாக குறைந்தது. இது ஜனவரி மாதத்தில் 71.7ஆக இருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் அந்நாட்டின் பணவீக்கம் 3 சதவீதமாக உயாந்தது. இது எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாகும். முந்தைய டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.9 சதவீதமாக இருந்தது. இது அமெரிக்காவுக்கு இரட்டை அடியாகும். அதிக பணவீக்கம் அல்லது பலவீனமான அமெரிக்க பொருளாதாரம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு தீங்கு விளைக்கும். ஏனென்றால், நீண்ட காலமாக வட்டி விகிதத்தை மாற்றம் செய்யாமல் இருப்பது அல்லது சாத்தியமான வட்டி உயர்வு அந்நாட்டு நிறுவனங்களை ஐடி செலவினங்களை குறைக்க வழிவகுக்கும். தங்களது வருவாயில் கணிசமான பகுதியை அமெரிக்காவிலிருந்து பெரும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

வெல்த்மில்ஸ் செக்யூரிட்டிஸின் ஈக்விட்டி உத்தி இயக்குனர் கிராந்தி பதினி கூறுகையில், அமெரிக்க வர்த்தக கூட்டாளிகளுடன் வரி சமநிலைக்கு டிரம் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்க பெடரல் வங்கியின் குழப்பான நிலை, வட்டி குறைப்புகளை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல் வட்டி உயர்வுக்கான சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியது. எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க செயல்திறன் துறை, அமெரிக்காவில் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகள் அரசாங்கத்தின் செலவினங்களை பாதிக்கலாம் மற்றும் பெரிய அரசாங்க ஒப்பந்தங்களை கொண்ட இந்திய ஐடி நிறுவனங்களை எதிர்மறையாக பாதிக்கலாம். இந்த எதிர்வினை அச்சங்களால் பங்குச் சந்தையில் அதன் தாக்கம் வெளிப்பட்டது. ஐடி பங்குகள் வாயிலாக இந்திய சந்தையில் மேலும் சரிவு ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தில் நிப்டி 2.3 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஆனால் ஐடி பங்குகளின் செயல்திறன் அதனை காட்டிலும் கடுமையாக சரிந்தது. நிப்டி ஐடி குறியீடு 9.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. கோஃபோர்ஜ், எம்ஃபாசிஸ், எல் அண்ட் டி மைண்ட்ட்ரீ, டிசிஎஸ் மற்றும் எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் ஆகிய 6 பங்குகளும் இரட்டை இலக்கங்களில் சரிந்தது. அதேசமயம், எச்சிஎல் டெக்னாலஜிஸ்,விப்ரோ,டெக் மகிந்திரா மற்றும் இன்போசிஸ் 8.3 சதவீதம் முதல் 5.9 சதவீதம் வரை சரிந்தன. சொனாட்டா சாப்ட்வேர் மற்றும் இன்டலெக்ட் டிசைன் அரினா ஆகிய பங்குகள் முறையே 28 மற்றும் 19 சதவீதம் சரிந்தன.
முதலீட்டாளர்கள் பெரிய ஐடி நிறுவனங்களில் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை தேட வேண்டும். குறிப்பாக, இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம். அதுவும் ஒரே நேரத்தில் மொத்தமா இந்த பங்குகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக பங்கின் விலை இறங்க இறங்க முதலீடு செய்வது சிறந்தது என்று தெரிவித்தார். இந்த ஆண்டில் இதுவரை அன்னிய முதலீ்ட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதேசமயம் இந்த மாதத்தின் முதல் 15 தினங்களில் ஐடி பங்குகள் ரூ.693 கோடி அனனிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இது சர்வதேச நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தற்காப்பு கொள்முதலை பிரதிபலிக்கிறது.
Story written by: Subramanian