ARTICLE AD BOX
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் கடினமான காலங்கள் ஆகும். இந்த நாட்களில் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் உணவு, தூக்கம் மற்றும் மனநிலை பாதிக்கப்படக்கூடும். அதிலும் போர்டு எக்சாம் எழுதும் மாணவர்களை கேட்கவே வேண்டாம். பரிட்சை மனஅழுத்தம் வந்து தானாக தொற்றிக் கொள்ளும். இந்த சமயத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வீட்டில் தயாரித்த உணவுகளைச் சாப்பிடுவது மிக முக்கியம். இந்த சமயத்தில் பரிட்சைக்கு தயாராகும் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்? எவற்றை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சிகிச்சைகள் :
1. குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியம்?
மிகவும் ஆரோக்கியமான குடல் மாணவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும். நார்ச்சத்து அதிகமான உணவுகளை சாப்பிடுவது குடல் நுண்ணுயிரிகளை அதிகரிக்க உதவும். பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
2. தேர்வுக்காலத்தில் ஜங்க் உணவுக்கு பதிலாக என்ன சாப்பிடலாம்?
மாணவர்கள் தினம் காலை முழு தானியங்கள் உட்கொண்டால், அவர்களின் ஜங்க் உணவு உணர்வு குறையும். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் பழங்கள் சாப்பிடலாம். இது பசியை குறைத்து, அதிக எண்ணெய் மற்றும் மசாலா நிறைந்த ஜங்க் உணவுகளை தவிர்க்க உதவும்.
3. தேர்வு நேரத்தில் சமநிலையான உணவு மன ஆரோக்கியத்திற்கு எப்படி உதவும்?
நாம் சாப்பிடும் உணவுதான் மனநிலையை தீர்மானிக்கிறது என்பதால் வீட்டில் சமைத்த உணவுகள் சிறந்ததாக கருதப்படுகின்றன. பழங்கள், காய்கறிகள், வறுத்த பருப்பு, எலுமிச்சை நீர், வாழைப்பழம் போன்ற உணவுகள் மனதை சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும். தேர்வுகளால் ஏற்படும் கோபம் மற்றும் சோர்வை குறைக்க, நல்ல தூக்கம் பெறுவது மிகவும் அவசியம்.
4. தேர்வு காலத்தில் செரிமானம் அதிகரிக்க என்ன செய்யலாம்?
மாணவர்கள் மன அழுத்தத்தால் செரிமான கோளாறுகளை சந்திக்கலாம். இதனால் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம். வாழைப்பழம் மற்றும் தயிர் சாதம் உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். நீர் அதிகமாக குடிப்பது முக்கியம், மேலும் தினமும் சில உடல்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
5. போதிய தூக்கம் அவசியம் ஏன்?
மாணவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படவும், நினைவாற்றல் பெருகுவதற்கும் போதிய தூக்கம் மிக அவசியமான ஒன்றாகும். இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதற்கு பதிலாக, இரவில் சீக்கிரம் தூங்கி விட்டு, அதிகாலையில் சீக்கிரம் எழுந்து படிக்கலாம். 15 நிமிடங்கள் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றிற்காக ஒதுக்கி விட்டு, பிறகு படிப்பை தொடர்வது இன்னும் விரைவான கற்றல் திறமை அதிகரிக்கும்.
தேர்வு நேரத்திற்கான மாற்று ஆரோக்கியமான உணவுகள் :
* காபி , டீக்கு பதிலாக க்ரீன் டீ குடிக்கலாம்.
* குளிர்பானங்களுக்கு பதிலாக அதிகமான நீர், மோர் அல்லது லஸ்ஸி எடுத்துக் கொள்ளலாம்.
* சிப்ஸ் போன்றவற்றிற்கு பதிலாக வீட்டில் தயாரித்த தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம்.
* அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகளுக்கு பதில் பால் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.