ARTICLE AD BOX
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் மனா எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகே எல்லை சாலைகள் அமைப்பின் முகாம் (Border Roads Organisation) ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பனிச்சரிவு ஏற்பட்டதால், முகாமில் இருந்து பணி செய்து வந்த தொழிலாளர்கள் 57 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 47 பேரையும் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக பேசிய உத்தராகண்ட் காவல்துறை தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் ஐஜி நிலேஷ் ஆனந்த் பர்னே, “பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மனாவுக்கு அருகிலுள்ள ராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களும் தனியார் நிறுவனத்திடமிருந்து BROவால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கியது தொடர்பாக பேசிய மாவட்ட நீதிபதி சந்தீப் திவாரி, “சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” எனத்தெரிவித்தார்.
இந்திய ராணுவமும் இதுதொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து தகவலைத் தெரிவித்துள்ளது. அதில், “கர்வால் செக்டாரில் உள்ள மனா கிராமத்திற்கு அருகிலுள்ள GREF முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் சிறிய பனிச்சரிவுகள் தொடர்ந்து இருந்தபோதிலும், இந்திய ராணுவத்தின் IBEX BRIGADE விரைவாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதுவரை 10 பணியாளர்கள் மீட்கப்பட்டு, ராணுவத்தால் மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் வீரர்கள் அங்கு செல்லும் நிலையில் உபகரணங்கள் அந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில். “சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் BROஆல் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின்போது பல தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கியதாக வருத்தமளிக்கும் செய்தி கிடைத்தது. மீட்புக் குழுக்களால் மீர்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உத்தராகண்ட் மனா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலைமை குறித்து அம்மாநில முதலமைச்சருடன் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. ராணுவத்துறையினரின் மீட்பு முயற்சிகளும் நடந்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் மழை மற்றும் பனிப்பொழிவு நிகழ்ந்த சூழலில் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிகளுக்கு மீட்புப் பணிக்கு வேகமாக செல்ல முடியாத சூழலும் உள்ளது. எனவே, கடுமையான சூழலில்தான் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.