ARTICLE AD BOX
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தவர் அம்ஜத். திருமணமான இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரது மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டி, அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து தனது வலையில் விழ வைத்தார்.
பின்னர் அவர்களை தனக்கு சொந்தமான ஒரு வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்த பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இவ்வாறாக அவர் 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சில பெண்கள் சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடமும் புகார் செய்தனர். அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்ஜத் 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அந்த ஆபாச வீடியோக்களை யாரும் பகிரக்கூடாது என்றும், மீறி பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.