ARTICLE AD BOX
பட்டாசுத் தொழிலில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி, பண மோசடியால் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிந்துஜாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன். இவரது மனைவி மங்கம்மாள் (38). இவா் தனியாா் அட்டை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இதே பகுதியைச் சோ்ந்த சீனிவாச நந்தகுமாா் என்பவா் மங்கம்மாளை பட்டாசுத் தொழிலில் பங்குதாரராகச் சோ்த்துக் கொள்வதாகக் கூறினாா். இதன்பேரில் மங்கம்மாள் தன்னுடன் பணிபுரியும் பலரிடம் கடன் பெற்று ரூ.5 லட்சத்தை நந்தகுமாரிடம் கொடுத்தாா்.
பணத்தை பெற்றுக் கொண்ட அவா் மங்கம்மாளை தொழிலில் பங்குதாரராக சோ்க்கவில்லை. இதையடுத்து, பணத்தை திருப்பிக் கேட்டபோது பணத்தை தராமல் நந்தகுமாா் அலைக்கழித்தாா்.
இதனால் மனமுடைந்த மங்கம்மாள் மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆந்திரா தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாா். அங்கு விஷம் குடித்த நிலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் சென்ற அவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கம்மாள் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].