பட்ஜெட்டில் ’ரூ’ விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

8 hours ago
ARTICLE AD BOX

தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ’ என்பது பெரிதானது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

இன்று அவர் வெளியிட்ட ‘உங்களில் ஒருவன்’ கேள்வி- பதிலில் அவர் இதைப் பற்றிக் கூறியுள்ளார். 

அதன் விவரம் : 

பட்ஜெட்டுக்கு முன்பு நீங்கள் போட்ட ட்வீட்டே தேசிய செய்தி ஆகிவிட்டதே?

ஒன்றுமில்லை. பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக் கொள்கையில நாம் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவதற்கு அதில் ‘ரூ’ என்று வைத்திருந்தோம். அவ்வளவுதான். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள் அதைப் பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள். ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான சம்பளத்தைத் தாருங்கள் - பேரிடர் நிதி தாருங்கள் – பள்ளிக்கல்வி நிதியை விடுவியுங்கள் என்று தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்கை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவரே , பல பதிவுகளில் ரூ என்றுதான் போட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்திலும் அனைவரும் Rupees-அ சிம்பிளா Rs. என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாகத் தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம்முடைய பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்!

பட்ஜெட்டுக்கான பிரிப்பரேஷன் எல்லாம் எப்படி செய்தீர்கள்?

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், ழான் திரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்கள். மறுபுறம், அடித்தட்டு மக்களிடமும் அவர்களின் தேவைகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம். அதுமட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் மக்களிடம் நல்ல ‘ரீச்’ ஆன திட்டங்கள் என்ன என்று பார்த்து, அதை நம்முடைய மாநிலத்திற்கு ஏற்ற மாதிரி கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக, பல நாட்கள் தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு பத்து மணி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் கூட உட்கார்ந்து பேசிப் பேசித்தான் இந்த பட்ஜெட்டைத் தயாரித்தோம்.

உங்களைப் பொருத்தவரை, பட்ஜெட் எப்படி சார் வந்திருக்கிறது?

நான் என்ன சொல்கிறேன் என்பதை விட, இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள். ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில், Budget that counts all என்று தலைப்பு போட்டு, ஒரு கோலத்தைப் போட்டு, கார்ட்டூனில் அனைத்துத் திட்டங்களையும் கொண்டு வந்ததையும் சேர்த்து, அதில் வெளியிட்டிருக்கிறார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’-வில் To checkmate opposition next year, TN Finance Minister moves infra, welfare pieces அதாவது, “எதிர்க்கட்சிகளின் அரசியல் குற்றச்சாட்டுகளை செக்மேட் செய்திருக்கிறது இந்த பட்ஜெட்” என்பதாக எழுதி இருக்கிறது. ‘தி இந்து’ நாளிதழில் “மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியத் துறைகளுக்குக் கிடைத்த வெற்றியே இந்த பட்ஜெட்” என்று எழுதியிருக்கிறது. “கல்வி, சமூகநலத் திட்டங்களுக்குப் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்” என்று ‘டெக்கான் கிரானிக்கள்’ எழுதி இருக்கிறது. “மக்கள்நலத் திட்டத்துக்கும் - உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக” ‘தி பிசினஸ் லைன்’ பாராட்டி இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்தையும் - மாநிலத்தின் நலத் திட்டத்தையும் மையப்படுத்தி இருப்பதாக ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ எழுதி இருக்கிறது. ‘தினமணி’-இல் நாம் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையைப் பற்றிச் சிறப்பான தலையங்கத்தை எழுதியிருக்கிறார்கள்... “இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது?” என்று கூசாமல் கேட்பவர்கள், பத்திரிகையையாவது படிக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு நெருக்கமான அறிவிப்பு எது?

எனக்கு எல்லாமே நெருக்கமானதுதான். மக்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் அவர்கள் போட்ட பதிவுகளைப் பார்த்தேன். ஸ்கேர்லட் பிம்பர்னல் என்ற ட்விட்டர் ஐடி, பெண்கள் பாதிப்புக்குள்ளாகுற கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை அரசே இலவசமாகத் தரவேண்டும் என்று என்னைக் குறிப்பிட்டு கோரிக்கை வைத்திருந்தார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நினைத்திருந்தோம். இப்போது இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, டாக்டர் நிகிதா மேஹ்ரா என்பவரும் “Fantastic News” என்று சொல்லி, நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, தெலங்கானாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். தமிழ்நாட்டிலும் இவ்வாறு செயல்படுத்தலாம் என்று முடிவெடுத்தோம். அதன்படி, ஊர்க்காவல் படையில் திருநங்கைகளையும் ஈடுபடுத்தும் அறிவிப்புக்குப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாக, நேஹா என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று, நீங்களே பாருங்கள். திருநங்கைகளின் சுயமரியாதை காக்கும் திட்டம் என்று தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருக்கிறார்.

சில நாட்கள் முன்பு விருதுநகர் சென்றபோது, அரசுக் காப்பகத்தில் இருக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிச் சென்றேன். காப்பகங்களில் இருக்கிறவர்களை நாம் பாத்துக் கொள்கிறோம். மற்ற குழந்தைகளுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் தாயுமானவர் திட்டம். இதைப் பார்த்து மருத்துவர் சென் பாலன் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். “நான் கட்டும் வரிப்பணம் இப்படி பயன்படுத்தப்படும் எனில், இதைவிட வேறு பெருமை என்ன உள்ளது?” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஆதரவற்ற முதியோருக்காக அன்புச்சோலை திட்டத்தை அறிவித்தோம். இதற்கு மக்கள் என்ன மாதிரி ரியாக்ட் செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

பொதுமக்கள் மட்டுமல்ல, திரு. ஆனந்த் சீனிவாசன் அவர்கள், “ஒன்றிய பா.ஜ.க. அரசைப் போல அல்லாமல், 2021-இல் தி.மு.க.வுக்கு வாக்களிக்காத மேற்கு மண்டலத்துக்கும் ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறது” என்று பாராட்டியிருக்கிறார், திரு. பிரபாகர் அவர்கள் “தமிழ்நாடு அரசின் சமூகநலத் திட்டங்கள் fixed deposit போல முப்பது ஆண்டுகளில் பலனைத் தரும் முதலீடுகள்” எனவும் “தமிழ்நாடு அரசு வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளது, அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் மிக குறைவாகவே கடன் வாங்கியிருக்கிறார்கள்” எனவும் பாராட்டி இருக்கிறார். திரு. சோம.வள்ளியப்பன் அவர்கள், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்துப் பகுதிகளையும், அனைத்துத் துறைகளையும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவனத்தில் கொண்ட மிகவும் balanced-ஆன பட்ஜெட்” எனப் பாராட்டுரையாகவே வாசித்திருக்கிறார். இப்படி இது ‘எல்லாருக்கும் எல்லாம்’ பட்ஜெட்!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால், அதை நாம் பரிசீலிக்கலாம். ஏதாவது எதிர்மறையாகச் சொல்வதற்காகவே, சிலர் சொல்வதில் அரசு மேல் இருக்கும் வன்மம் மட்டும்தான் தெரிகிறது. உருப்படியாக அதில் எதுவும் இல்லை. இருந்தாலும், நாம் எந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை ஆதாரப்பூர்வமாகச் சொல்ல விரும்புகிறேன். 2011-இல் இருந்து 2016 வரைக்கும் நம்முடைய கடன் வளர்ச்சி என்பது 108 விழுக்காடு. இதுவே, 2016-2021-இல்  128 விழுக்காடாக அதிகரித்தது. ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து இப்போது வரை 93 விழுக்காடு என்று இதைக் குறைத்திருக்கிறோம்.

கடன் எல்லாமே கட்டுக்குள் இருக்கிறதா? எந்த வகையில் மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு தனித்துவமாக இருக்கிறது?

தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. கடன் வாங்காத அரசு என்று எதுவும் இல்லை. அப்படி வாங்கும் கடனை முறையாகச் செலவு செய்கிறோமா என்பதுதான் முக்கியம். அந்த வகையில், எதிர்காலத் தலைமுறைக்கான முதலீடாகத்தான் திராவிட மாடல் அரசு கடன் தொகையைச் செலவு செய்திருக்கிறது. அதனால்தான், எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற விமர்சனத்தை வல்லுநர்களும், நாளேடுகளின் தலையங்கங்களுமே “தவறு” என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார்கள்.

அடுத்து என்ன பிளான்?

இப்போது அறிவித்ததை எல்லாம் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சர்களை, அதிகாரிகளை முடுக்கி விடுவதுதான் உடனடியாக என்னுடைய அடுத்த வேலை. அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில்  ஓரவஞ்சனை, அதைப் பற்றி நாம் குரலெழுப்புவதால் நாடாளுமன்றத் தொகுதிக் குறைப்பு என்ற ஆபத்து... இப்படி நம்முடைய மாநிலத்திற்கான நிதிக்கும், நீதிக்கும் போராட வேண்டியிருக்கிறது. அதையும் பார்க்க வேண்டும். 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும், தமிழ்நாடு அனைத்திலும் ‘நம்பர் ஒன்’-ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு நிறைய பணிகள் இருக்கிறது. அதனால் ஓய்வே கிடையாது!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். 

Read Entire Article