ARTICLE AD BOX
சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைக்கும் திட்டம் சிறப்பான திட்டம் என்றும், தமிழக அரசு செயல்படுத்த உள்ள செமி ஹைஸ்பீடு ரயில் சேவையால் சென்னையில் மக்கள் தொகை பெருக்கும் குறையும் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து பதிப்பாளர் ஆழி செந்தில்நான் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- 2025-2026ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன், மாநிலம் முழுக்க வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழிற்துறை கொள்கையை தெரிவித்துள்ளனர். சென்னை மட்டுமின்றி கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் புதிய தொழில் முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் முயற்சிகள் பழைய தொழிலாக இல்லாமல், இன்றைய காலகட்டத்தில் காலநிலை மாற்றத்தையும் அனுசரிக்கக்கூடிய புதிய தொழில்களாகும். ஏ.ஐ., ரோபோட்டிக்ஸ், ஏ.ஆர்.வி.ஆர் இதுபோன்ற புதிய தொழில்கள் உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் மிகப்பெரிய அளவில் முதலீட்டை ஈர்க்கவும், வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்கள். நவீன தொழில்துறையில் தமிழ்நாட்டை வளர்ப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு, டேட்டா சென்டர் தேவை. பட்ஜெட்டில் மிக முக்கியமாக செமி கண்டக்டர் பற்றி பேசியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு செமி கண்டக்டர் தொழில்நுட்பம் வர வேண்டும் என்பதற்காக 20 வருடங்களுக்கு முன்பாகவே முயற்சி எடுத்தவர்கள் திமுகவினர். 1990 காலகட்டத்தில் முரசொலி மாறன் நாங்குநேரியில் இண்டஸ்ட்ரியல் காரிடார் கொண்டுவர முயற்சி செய்து, பல்வேறு காரணங்களால் முடியாமல் போனது. அண்மையில் வர வேண்டியவற்றை எல்லாம் டெல்லியில் தடுத்து, குஜராத்தில் அமைக்க வைத்துவிட்டார்கள். ஆனால் திமுக அரசு செமி கண்டக்டருக்கான பங்கை பட்ஜெட்டில் உறுதிபடுத்தியுள்ளது.
மற்றொருபுரம் ஓசூரை மையப்படுத்தி நாலட்ஜ் காரிடார் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே அங்கு விமான நிலையம் கொண்டுவர போராடுகிறோம். இதுதவிர தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரக்கூடிய பல்வேறு மையங்களை பார்க்கும்போது, தமிழ்நாடு முழுவதும் சமமான வளர்ச்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். கிருஷ்ணகிரி, தருமபுரி எல்லாம் வறண்ட பகுதிகள். இன்றைக்கு அங்கு அதிநவீன தொழில்நுட்பம் வருகிறது. பெங்களுருவுக்கு அருகில் இருப்பதும் ஒரு காரணம். ஆனால் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லவா. டாடாவின் ஸ்மார்ட்போன் பேக்டரி அங்கே வருகிறது என்றால் அதற்கான கட்டமைப்பை அங்கே உருவாக்கியிருக்கிறோம் அல்லவா? தமிழ்நாடு முழுவதும் பாயோ சைன்ஸ் பார்க், காலணி தொழிற்சாலை, நாலட்ஜ் காரிடார், மினி டைடல் பார்க், சிட்கோ தொழிற்பூங்காக்கள், செமி கண்டக்டர்கள், டைடல் பார்க்குகள் என கொண்டுவரப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் எந்த பகுதியும் புறக்கணிக்கப்படாதபோது, எந்த பகுதி மக்களும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.
சீனாவுக்கும், அமெரிக்காவும் இடையிலான வர்த்தகப் போர் மற்றும் கொரோனாவுக்கு பின்பு ஏற்பட்ட சூழல் காரணமாக சீனா பிளஸ் ஒன் கொள்கையை உலகம் முழுவதும் பேசுகிறார்கள். சீனாவில் உற்பத்தி செய்தாலும், அதற்கு வெளியேயும் ஒரு உற்பத்தி மையம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது சைனா பிளஸ் ஒன் என்றால் இந்தியாதான். இந்தியாவில் யார் என்று பார்த்தால், இயற்கையாகவே தமிழ்நாடு தான் நெம்பர் ஒன்றாக உள்ளது. குர்கான், குஜராத், மகாராஷ்டிராவும் அந்த பட்டியலில் உள்ளன. ஆனால் சமமான வளர்ச்சி காரணமாக நமக்கு ஏற்கனவே 30 வருடங்கள் அனுபவம் உள்ளது. ஒரு பக்கம் மென்பொருளும் உள்ளது. மறுபுறம் ஹார்டுவேரும் உள்ளன. மற்ற இடங்களில் இவை இரண்டும் கிடையாது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேகமாக நாட்டில் முதல் இடத்திற்கு வந்துவிட்டோம். சூரிய மின்சக்தி போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களிலும் மேலே வந்திருக்கிறோம். அதன் காரணமாக ஒரு நிறுவனம் வரும்போது இவை அவர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. அதனால் சீனா பிளஸ் ஒன்னில் உள்ள ஒன் இந்தியா என்றால், இந்தியாவில் நெம்பர் ஒன் தமிழ்நாடு ஆகும்.
மத்திய அரசு எந்த அளவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறதோ அந்த அளவுக்கு தமிழ்நாடு முன்னேறும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வரும் நிறுவனங்களை குஜராத்துக்கு அழைத்துச்செல்லலாம். அப்படி நிறுவனங்கள் அங்கே சென்ற பின்னர் அவர்களுக்கு ஊழியர்கள் எங்கே இருந்து வருவார்கள். எந்த சூழலில் இருந்து அவர்களுககு விநியோகிஸ்தர்கள் வருவார்கள். சில விஷயங்களை எங்கு வேண்டும் என்றாலும் அமைக்கலாம். ஆனால் இனனும் சில விஷயங்களுக்கு கடற்கரை பகுதிகள் வேண்டும். சென்னை என்பது வெறும் துறைமுகம் மட்டும் அல்ல. டேட்டா சென்டரும் அதுதான். இந்தியாவில் மும்பை, சென்னை ஆகிய 2 இடங்கள் வழியாகத்தான் சர்வதேச டேட்டா சென்டர் வர முடியும். அதனால் சென்னை என்பது வெறும் கப்பல் செல்லும் துறைமுகம் மட்டும் கிடையாது. கடல் அடி கேபிள்கள் வந்து சேரக்கூடிய இடம். இந்தியாவின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதனால் வேறு எங்கு ஆட்கள் கிடைப்பார்கள். பின்டெக் தொடர்பாக என்றால் மும்பையில் வைத்துக்கொள்ளலாம். வழக்கமான மென்பொருள் என்றால் பெங்களுரில் நிறைய ஆட்கள் கிடைப்பார்கள் அதனால் அங்கே வைத்துக்கொள்ளலாம். உற்பத்தி தொழில்நுட்பத்தில் தமிழ்நாடுதான் முதலிடம். இங்குதான் அதிக தொழிற்சாலைகள் இருக்கின்றன. இன்றைக்கு உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் ஒன்றாக மாறிக் கொண்டிருக்கின்றன. அந்த ஸ்மார்ட் மேனுபேக்சரிங் என்று சொல்லக்கூடிய 4வது தொழில்புரட்சியில் எவை எல்லாம் முக்கியமான விஷயங்களாக உள்ளனவோ அவற்றில் நாம் ஏற்கனவே நன்றாக உள்ளோம். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால், உள்நாட்டிலேயே நாம் ஒரு சொந்த நிறுவனத்தை தொடங்கினோம் என்றால் அதற்கான சிறந்த சூழல் தமிழ்நாட்டில் தான் உள்ளது.
சென்னைக்கு அருகில் புதிய நகரம் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் சொல்லி இருக்கிறார்கள். இது மிகவும் முக்கியமான திட்டமாகும். சென்னையில் இன்று 1.25 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அப்போது இந்த நகரம் அப்படியே இருக்க முடியாது. பல பெரிய நகரங்கள், தங்களுக்கு அருகில் குட்டி நகரங்களை உருவாக்குவது என்பதும் வளர்ச்சிதான். டெல்லிக்கு அருகில் குர்கான், நொய்டாவும் உருவாகி, 3 நகரங்களும் இணைந்து தேசிய தலைநகர பகுதியாக உள்ளது. மும்பை அருகேயும் இதுபோன்ற நகரங்கள் இருக்கின்றன. சென்னைக்கு துணைக்கோள் நகரம் அமைக்க வேண்டி 20 வருடங்களுக்கு முன்பாகவே பேசி, அது நடக்காமல் போய்விட்டது. இப்போது கட்டாயம் புதிய நகரத்தை உருவாக்க வேண்டும். சென்னையில் இன்றைய நிலையில் இருக்கும் வாகன போக்குவரத்து நெரிசல் என்ன? பட்ஜெட்டில் சொல்ல வருவது பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வரை சென்னைதான். இனி எதை செய்தாலும் அதற்கு அந்த பக்கம் செல்ல வேண்டும். அல்லது ஒட்டிப்போட வேண்டும். பிரச்சினை என்றால் மற்ற நகரங்களையும் வளர்க்க வேண்டும். சுத்தி இருக்க இடங்களில் மாற்று மையங்களை உருவாக்கிட வேண்டும். இல்லாவிட்டால் சென்னைதான் மீண்டும் பாதிக்கப்படும்.
இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால், தமிழ்நாட்டிற்கான ரயில் சேவை என்பது மத்திய அரசை சார்ந்து பயன் கிடையாது. காலங்காலமாக கெஞ்சி கூத்தாடியபோதும் ரயில் பாதைகள் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. சென்னை மெட்ரோவோ, மத்திய – மாநில அரசுகளின் பங்களிப்பில் உள்ளதுதான்.தற்போது பட்ஜெட்டில் செமி ஹைஸ்பீடு ரயில் சேவை குறித்து பேசியுள்ளனர். அதை படிக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் வேகமாக செல்வதற்குரிய சாலை வசதிகள் கிடையாது. அதன்காரணமாக தமிழ்நாட்டில் 3 இடங்களில் 160 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய செமி ஹைஸ்பீடு ரயில் திட்டத்தை தமிழக அரசே முன்வந்து செயல்படுத்த உள்ளது. வழக்கமான ரயில்பாதையில் வந்தே பாரத் ரயிலுக்கு மேல் இயக்க முடியாது. சீனாவில் உள்ள ஹைஸ்பீடு ரயில்கள் உலக பிரசித்தி பெற்றதாகும். 250 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையதாகும். இந்த ரயில் மூலம் சென்னை நகரம் வளராது. இங்கிருந்து வேலுருக்கு நீங்கள் ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும் என்றால் ஏன் வேலூர், காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் வீடு வாங்க போகிறார்கள். வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு சென்னை தங்குவதற்கு காஸ்ட்லியாக இருந்தால் ராணிப்பேட்டையில் தங்கிவிட்டு போய் வரலாம் அல்லவா? அதேபோல் திண்டிவனம் வரை ஒரு ஹைஸ்பீடு வழித்தடமும், மற்றொன்று வேலூர் வரையிலும் மற்றொன்று கோவை அருகிலும் அமைக்கப்படுகிறது. இதுதான் வளர்ச்சியாகும். இப்போது இந்த மொத்த பகுதிகளுக்கு வளர்ச்சி சரிசமமாகிவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.