ARTICLE AD BOX
தமிழ்நாடு அடுத்த 14 மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் சூழ்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்தான் கடைசி முழு பட்ஜெட். எனவே இது கவர்ச்சியான அறிவிப்புகளை கொண்டதாக இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாமல், பரவலான வளர்ச்சியை, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களைக்கொண்டதாக இருந்தது. பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சற்றும் களைப்பில்லாமல் 2 மணி 40 நிமிடங்கள் வாசித்தார். இதில் கடைசி 5 நிமிடத்தில் அனைவரும் பாராட்டும் வகையில் தமிழகத்திற்கு மடைதிறந்த வெள்ளம்போல நல்லதொரு 4 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் அடையும் வகையில், அவர்களது ஈட்டிய விடுப்பை 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம், ரூ.10 லட்சம் வரையிலான வீட்டு மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்தும் பெருந்திட்டம். அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பலனளிக்கும் பல வளர்ச்சித்திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம், அரசு பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,000 கோடி, சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் மற்றும் ஒரு புதிய நீர்த்தேக்கம், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம், ஓசூரில் தகவல்தொழில்நுட்ப பூங்கா, விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா, கோவையில் செமி கண்டக்டர் தொழில் பூங்கா, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட நிதியுதவி, 10 புதிய அரசுக்கல்லூரிகள், சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திட்டங்கள், இந்த ஆண்டு 40 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் போன்றவை முத்தான அறிவிப்புகளாக இருந்தன.
மேலும் பெற்றோரை இழந்த 50 ஆயிரம் குடும்பங்களைச்சேர்ந்த பிள்ளைகள் கல்வியை தொடர 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை உள்பட பல சமூகநல கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 96 கோடி அளவுக்கு மொத்தக்கடன் பெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதியன்று தமிழகத்தின் நிலுவையில் உள்ள மொத்தக்கடன் தொகை ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த செலவீனத்தில் வட்டி மட்டும் ரூ.70 ஆயிரத்து 754 கோடி கட்டவேண்டியதிருக்கிறது என்றாலும், தமிழ்நாடு 8 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், நிதிக்குழு கடன்வாங்க பரிந்துரைத்துள்ள வரைமுறைக்குட்பட்டே இந்த கடன்கள் வாங்கியிருப்பதால் இதை சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட பட்ஜெட் என்றே சொல்லலாம்.
பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒன்றுதான் நிறைவேறவில்லையென்றாலும் தேர்தலுக்கு முன்பாக அதனை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பட்ஜெட் பரவலான வளர்ச்சியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்ற எண்ணம்தான் மக்களிடையே இருக்கிறது. மொத்தத்தில் பார்த்து பார்த்து மட்டுமல்ல, பல பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசித்து கேட்டு கேட்டும் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது என்கிறார், பொருளாதார வல்லுனர் சோம.வள்ளியப்பன்.