ARTICLE AD BOX
அமிர்தசரஸில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயில் மீது சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் கோயிலின் உள்ளே இருந்த பூசாரி காயமின்றி தப்பினார். சிசிடிவி காட்சிகளில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கொடி ஒன்றை ஏந்தியபடி இருந்தனர்.
பின்னர் அவர்கள் கோயிலுக்கு வெளியே சிறிது நேரம் நோட்டமிட்டு வளாகத்தை நோக்கி ஒரு பொருளை வீசினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பினர்.
அவர்கள் சென்றதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சப்தத்தால் அப்பகுதியே குலுங்கியது. அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் புல்லார், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நாங்கள் தீவிரமாக விசாரித்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முயற்சித்து வருகிறோம்.
வெடிபொருளின் தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும் நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாகக் கருதுகிறோம் என்றார்.