ARTICLE AD BOX
2024 அக்டோபர் மாதம் முதல் இந்திய பங்குச் சந்தை தொடர் சரிவுடன் காணப்படுகிறது.
குறிப்பிடத்தகுந்த ஏற்றம் நிகழாததால், பங்குச் சந்தையில் இருந்து இதுவரையில் ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்புடைய முதலீடுகள் வெளியேறியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேகாலகட்டத்தில் சீன பங்குச் சந்தையின் மதிப்பு 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது குறித்து டெசர்வ் (Dezerv) என்ற முதலீடு மற்றும் பங்குச் சந்தை ஆலோசனை நிறுவனத்தின் துணை நிறுவனர் வைபவ் போர்வல் குறிப்பிட்டுள்ளதாவது,
’’தேசிய பத்திரப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி கடந்த ஜனவரியில் மட்டும் ரூ. 25,000 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். 2023ஆம் ஆண்டில் 1.7 லட்சம் கோடி வரவு இருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தற்போது நிகழ்ந்துள்ளது.
இத்தகைய பங்குச் சந்தை சரிவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை சீனா எடுத்துவருகிறது. வட்டி விகித குறைப்பு, சொத்துத் துறை ஒத்துழைப்பு, பணப்புழக்கத்தை சீராக்குவது போன்ற சீனாவின் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், சீன பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது.
உலகளவில் நிகழும் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்றவற்றால் சீன பங்குகளும் சரிவை எதிர்கொண்டன.
எனினும் இந்தியாவுக்கு கடந்த அக்டோபர் முதல் 1 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பங்குகள் வெளியேறி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதேகாலகட்டத்தில் சீன பங்குச் சந்தையில் 2 லட்சம் கோடி டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தை நிலவரம்
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 24) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 856.66 புள்ளிகள் சரிந்து 74,454.41 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.14 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243.40 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.07 சதவீதம் சரிவாகும்.
அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3% வரை சரிந்தன. நிஃப்டி பட்டியலில் ஆட்டோ, நுகர்வோர் பொருள்கள் துறை மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு சரிவாகும்.
இதையும் படிக்க | 8 மாதங்களில் இல்லாத அளவு சரிந்த பங்குச் சந்தை!