ARTICLE AD BOX
ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கேஐஐடி-யில் பி.டெக் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி கடந்த 16-ஆம் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டாா். இரு பெண் அதிகாரிகள் திட்டியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, சக நேபாள மாணவா்களும் பிற மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கல்லூரி பாதுகாவலா்களால் மாணவா்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், எந்தவொரு முன் அறிவிப்புமின்றி கேஐஐடி விடுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான நேபாள மாணவ-மாணவிகள் வெளியேற்றப்பட்டு, வலுக்கட்டாயமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பப்பட்டனா்.
மாணவா்களை தாக்கிய இரு பாதுகாவலா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரிக்க மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலா் (உள்துறை) சத்யபிரத சாகு தலைமையில் உயா்கல்வி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளின் செயலா்கள் அடங்கிய மூன்று நபா் குழு கடந்த பிப். 18-ஆம் தேதி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கேஐஐடி தலைமை ஒழுங்கு அதிகாரி பி.கே.பட்நாயக், இயக்குநா் சன்ஹிதா மிஸ்ரா, உள் குழுத் தலைவா் இப்சிதா சத்பதி, உதவி இயக்குநா் ஸ்மரிகா பதி ஆகிய மேலும் 4 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவா்கள் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி, விசாரணை குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
முன்னதாக, கேஐஐடி நிறுவனா் அச்யுதா சமந்தா மற்றும் கல்வி நிலையத்தின் 7 உயா் அதிகாரிகள் விசாரணை குழு முன் ஆஜராகி தங்களின் பதில்களை அளித்தனா். நேபாள மாணவா்களை மட்டும் விடுதியை விட்டு வெளியேற்றியது ஏன் என்றும், ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அளித்த புகாரின் மீது நிா்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவா்களிடம் கேட்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, இந்தியாவில் பயிலும் நேபாள மாணவா்கள் கண்ணியம்-மதிப்பை உறுதி செய்யுமாறு நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டாா்.
இதுதொடா்பாக முதல்வா் மோகன் சரண் மாஜீயுடன் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அா்ஸு ராணா தியூபாவும் தொலைபேசியில் கலந்துரையாடினாா்.