ARTICLE AD BOX
நெல்லை: நெல்லை அருகே அங்கன்வாடி மைய வாசலில் மலம் கழித்த விவகாரத்தில் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மேலகுன்னத்தூர் பகுதியில் மினி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்றைய தினம் காலையில் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்காக வந்த ஊழியர்கள் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி ஆகினர்.
அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையலறை முன்பு மலம் கழித்து அந்த மலத்தை சுவர்கள் மற்றும் கதவுகளில் பூசி சென்றனர். இவ்விவகாரம் தொடர்பாக அங்கன்வாடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பஞ்சாயத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி மையம் ஊழியர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஊருக்குள் தெரியவந்த நிலையில் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடிமையத்துக்கு குழந்தைகளை அனுப்பாமல் உள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அதிகாரிகள் நேரடியாக இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுப்பதாக பெற்றோர்களிடம் உறுதி அளித்து குழந்தைகளை மீண்டும் அங்கன்வாடி மையத்துக்கு வரவழைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்று வந்தாலும் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நெல்லை அருகே அங்கன்வாடி மைய வாசலில் மலம் கழிப்பு: மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.