ARTICLE AD BOX
விஜய் தொலைக்காட்சியில் ‘நீயா நானா’ நிகழ்வில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக நடந்த விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாது என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக சமையல் தொடர்பான விவாதம் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "நீயா நானா?" விவாத நிகழ்ச்சியில் இந்த வாரம் 'மும்மொழிக் கொள்கை' விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி, இன்று ஒளிபரப்பு செய்யப்பட இருந்தது. இது தொடர்பாக விளம்பரமும் கொடுக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு திடீரென அந்த பதிவு நீக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் இன்று ஒளிபரப்பு செய்யப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை தலைப்பிலான விவாதத்தை தவிர்த்துவிட்டு, வேறு ஒரு தலைப்பிலான நிகழ்ச்சி இன்று ஒளிபரப்ப உள்ளனர்.
யாருடைய அழுத்தத்தின் காரணமாக விஜய் தொலைக்காட்சி, 'மும்மொழிக் கொள்கை' தொடர்பான எபிசோடை ஒளிபரப்புவதில் இருந்து பின்வாங்கி உள்ளது என்ற கேள்வியை பலரும் முன்வைத்துள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாகப் பொதுவெளியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, திமுக மாணவர் அணி செயலாளர் தனது எக்ஸ் தளத்தில்:
"நீயா நானா நிகழ்ச்சி - மனிதர்களின் உணர்வுகளை அப்படியே வெளியில் காட்டிய நிகழ்ச்சி. சமூக நீதி பக்கம் நின்று அறம் பேசிய நிகழ்ச்சி. இனி அந்த அறம் தொடருமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டில் சில வாரங்களாகவே பற்றி எரிகின்ற மும்மொழிக் கொள்கை - இந்தி திணிப்பு விவகாரத்தை கடந்த வாரம் டாபிக்காக எடுத்து பேசி இருக்கின்றனர். என்ன பேசப்பட்டு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் கலந்து கொண்ட பாஜகவினர் மேலிடத்தில் கூறி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானால் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாம் கூறி வரும் அனைத்தும் பொய் என தெரியவரும். ஆகவே உடனே நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
அதன்படி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு வேறு டாபிக்கை அவசர அவசரமாக ஒளிபரப்பி உள்ளனர். நாளையும் ஒளிபரப்பப் படவில்லை. படப்பிடிப்பு நடத்தி எடிட் செய்து ஃபைனல் செய்த நிகழ்ச்சியையே தூக்கி போட்டு விட்டனராம். ஒளிபரப்பாகாது என்கின்றனர். ரிலையன்ஸ் குழுமமான ஜியோ ஸ்டார் குழுமத்தை வாங்கியபோதே நாம் விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சியான நீயா நானா என்ன ஆகுமோ என அச்சப்பட்டேன். அது நிகழ்ந்தே விட்டது." எனத் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பான நிகழ்வு நிறுத்தப்பட்டது குறித்து விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக நீயா நானா குழுவிடம் பேச முயன்றோம் யாரும் அழைப்பை ஏற்கவில்லை.