ARTICLE AD BOX
நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல், வெறும் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது சொத்துக்களை முடக்கி உள்ளதாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
;எந்திரன்; படத்தின் கதை திருட்டு விவகாரத்தில், இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
எந்திரன் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைகிறேன் என்றும் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஆரூர் தமிழ்நாடன் மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல், வெறும் புகார் அடிப்படையில் தனது சொத்துக்களை முடக்கி உள்ளதாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கை முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகத்தை குறிக்கிறது என்றும் ஷங்கர் கூறியுள்ளார். மேலும், அதிகாரிகள் தங்களுடைய நடவடிக்கையினை மறு பரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.