ARTICLE AD BOX
கதை 1:
"உலகம் நல்லதா கெட்டதா..?" என்று குருவிடம் கேட்டான் சீடன்.
"பூனையின் பல் நல்லதா கெட்டதா..?" என பதில் கேள்வி கேட்டார் குரு.
சீடன் திருதிருவென விழித்தான்.
"பூனைக்குட்டியிடம் போய் தாய்ப் பூனையின் பல்லைப் பற்றி கேட்டால், 'கருணையின் பிறப்பிடம் அது' என்று சொல்லும். ஏனெனில் சில சமயங்களில் குட்டியை தன் பல்லால் கவ்வி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் தாய்ப் பூனை.
அதே பூனையின் பல்லைப்பற்றி ஒரு எலியிடம் கேட்டால், 'உலகிலேயே கொடிய ஆயுதம், பூனையின் பல்தான்' என்று சொல்லும்.
அதுபோலத்தான் உலகம் நல்லதா, கெட்டதா என்பது, அவரவர் காணும் தன்மையைப் பொறுத்தது" என்று கூறினார் குரு.
******
கதை 2:
ஒரு துறவிக்கு இரு சீடர்கள் இருந்தார்கள். முதலாவது சீடன் இறைவன் மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். எப்போதும் இறைவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பான். இரண்டாவது சீடன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். இறைவனை வணங்குபவர்களை கிண்டல் அடித்துக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் இருவரும் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். கடவுளின் மீது பக்தி கொண்ட சீடனுக்கு ஒரு கல் இடறி, கால் கட்டை விரலில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதே சமயத்தில் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சீடனுக்கு ஒரு தங்க நாணயம் அவனது காலுக்கடியில் கிடைத்தது.
இருவரும் துறவியிடம் சென்றனர். இரண்டாவது சீடன் சொன்னான்: "சுவாமி.. பார்த்தீர்களா... கடவுள் நம்பிக்கை கொண்ட அவனுக்கு காலில் அடிபட்டதுதான் மிச்சம். கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கோ ஒரு தங்க நாணயம் பரிசாக கிடைத்தது. நான்தானே அதிர்ஷ்டசாலி?" என்று கிண்டலாக கேட்டான்.
அதற்குத் துறவி, "உண்மையில் இன்று அவனுக்கு ஒரு பெரிய விபத்து நடக்க இருந்தது. அவனுடைய கடவுள் பக்தியே அதை சிறு விபத்தாக மாற்றியது. அதேபோல் உனக்கு பெரிய தங்கப் புதையல் கிடைப்பதாக இருந்தது. உன்னுடைய பரிகாச குணத்தால், புதையலுக்கு பதிலாக ஒரு தங்கக் காசு மட்டுமே உனக்கு பரிசாக கிடைத்தது. இப்போது சொல்.. யார் அதிர்ஷ்டசாலி..?" என்று கேட்டார்.
அந்த சீடன் வெட்கி தலை குனிந்தான்.
******