நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைவிமர்சனம்

3 days ago
ARTICLE AD BOX

பா. பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து இயக்குநர் தனுஷின் அடுத்த படைப்பு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இளைஞர்களை வைத்து இப்படத்தை தனுஷ் உருவாக்கியுள்ளார். இன்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

ஆரம்பமே படம் காதல் தோல்வி பாடலுடன் தொடங்க, பிரபு (பவிஷ்) தனது வருங்கால மனைவியிடம் (பிரியா வாரியர்) தன் முதல் காதல் தோல்வி குறித்தும், காதலி குறித்தும் சொல்ல துவங்குகிறார்.

செஃப் தொழிலை ஆர்வத்துடன் படித்து வரும் கதாநாயகன் பிரபு, கதாநாயகி நிலாவை (அனிகா) சந்திக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் தனது வீட்டில் இதை இருவரும் சொல்கிறார்கள்.

பிரபுவின் வீட்டில் தனது மகனின் விருப்பத்திற்கு க்ரீன் சிக்னல் கிடைத்தாலும், நிலாவின் வீட்டில் அவரது தந்தை சரத்குமார், பிரபுவுக்கு நோ என கூறிவிட்டார். ஆனால், நிலா தனது வாழ்க்கை துணை பிரபு தான் என உறுதியாக இருக்க, பிரபு எப்படிப்பட்டவன் என பழகி பார்க்க வேண்டும் என சரத்குமார் நினைக்கிறார்.

மகளின் விருப்பத்திற்காக பிரபுவுடன் பழகி பார்க்கும் சரத்குமார், வெறுப்பை மட்டுமே காட்டி வருகிறார். பிரபு vs சரத்குமார் என்பது போல் செல்ல, ஒரு கட்டத்தில் தனது காதலியின் தந்தையான சரத்குமாருக்கு புற்றுநோய் இருப்பதை பிரபு அறிகிறார்.

இறுதிக்காலத்தில் அவரது ஆசை போலவே அவருடைய மகளின் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதால், நிலாவைவிட்டு விலக பிரபு முடிவெடுக்கிறார். பிரபு - நிலாவின் காதல் உடைய, அடுத்த 6 மாதத்தில் நிலாவிற்கு வேறொரு நபருடன் திருமணம் நடக்கவிருக்கிறது.

இந்த திருமணத்திற்கு பிரபு செல்கிறார், அதன்பின் என்ன நடந்தது, நிலாவும் பிரபுவும் இணைந்தார்களா இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

இயக்குநர் தனுஷ் மீண்டும் சிறப்பான திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அவை யாவும் படத்தை பெரிதாக கெடுக்கவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் படியாகவும், இந்த காலத்து இளைஞர்களையும் கவரும் வகையிலும் அமைத்துள்ளார் இயக்குநர் தனுஷ்.

ஹீரோ, ஹீரோயினை தாண்டி அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால், அது மேத்யூ தாமஸ் நடித்த ராஜேஷ் கதாபாத்திரம்தான். கதாநாயகனின் உயிர் நண்பனாக நடித்து, நம்முடைய உயிர் நண்பனை நினைவூட்டுகிறார். நகைச்சுவை காட்சிகளில் வேற லெவல் பர்ஃபார்மென்ஸ். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேனின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம்.

வழக்கமான காதல் கதை என கூறி இப்படத்தை தனுஷ் அடையாளப்படுத்தி இருந்தாலும் கூட, சற்று வித்தியாசமான காதல் கதையாகவே தெரிந்தது. ஆனால்,  நகைச்சுவை காட்சி ஒர்கவுட் ஆனதுபோல், எமோஷனல் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு பெரிதாக மனதை தொடவில்லை. இது படத்திற்கு மைனஸாக அமைகிறது.

மற்றபடி படத்தில் குறை என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்கை அதிர வைத்தது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளை காப்பாற்றியதே ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் படத்தில் அவருடைய கேமியோவும் சிறப்பாக இருந்தது. பிரியங்கா மோகன் நடனம் சிறப்பு.

அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் இதற்கு முன் திரையில் பார்த்திருக்கிறோம். ஆனால், பவிஷ், ரப்பியா கத்தூண், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் அறிமுகப் படத்திலேயே தங்களால் முடிந்த அளவுக்கு பெஸ்ட்-ஐ கொடுத்துள்ளனர். அதற்கு பாராட்டு.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பாடல்கள் காட்சிகளை ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் அழகாக காட்டியிருந்தார்கள்.

பிளஸ் பாயிண்ட்

நடிகர்களின் நடிப்பு

தனுஷின் இயக்கம், திரைக்கதை

பின்னணி இசை, பாடல்கள்

நகைச்சுவை காட்சிகள்

கிளைமாக்ஸ் 

மைனஸ் பாயிண்ட்ஸ்

மனதை தொடாத எமோஷனல் காட்சிகள்

மொத்தத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜாலியா போங்க, ஜாலியா வாங்க.. 

Read Entire Article