புகழ்பெற்ற பங்குச் சந்தை முதலீட்டாளர் அமெரிக்காவை சேர்ந்த வாரன் பஃபெட். பிரபலமான பெர்க்ஷயர் ஹாத்வே குழுமத்தின் தலைவரும் இவர்தான். பெர்க்ஷயர் ஹாத்வே குழுமம், முதலீடு, இன்ஸ்யூரன்ஸ் உள்பட 189 வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.2024ம் ஆண்டு இறுதி நிலவரப்படி, பெர்க்ஷயரின் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமான இருப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு 33,420 கோடி டாலரை எட்டியது. வாரன் பஃபெட் ஏன் இவ்வளவு பெரிய தொகையை பங்குகளில் முதலீடு செய்யாமல் கையிருப்பாக வைத்துள்ளார் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அதற்கான விடை சில மாதங்களுக்கு பிறகுதான் கிடைத்தது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை முன்பே கணித்த வாரன் பஃபடெட், புத்திசாலிதனமாக விலை உச்சத்தில் இருந்த பங்குகளை விற்று ரொக்கமாக்கி கொண்டார்.

தற்போது பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வாரன் பஃபெட் அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறார். வாரன் பஃபெட் தனக்கு சொந்தமான அமெரிக்காவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்களில் ஒன்றான ஹோம் சர்வீசஸ் ஆஃப் அமெரிக்காவை விற்பனை செய்வது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெரிக்காவில் அதிகரித்து வரும் அடமான விகிதங்கள், குறைந்து வரும் விற்பனை மற்றும் நிதி உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் அந்நாட்டு ரியல் எஸ்டேட் போராடி வரும் இந்த நேரத்தில் வாரன் பஃபெட் ஹோம் சர்வீசஸ் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தை விற்பனை செய்ய யோசிப்பது, ரியல் சந்தை ஒரு கடினமான பயணத்தை எதிர்கொள்கிறது அல்லது எதிர்கொள்ளும் என்பதற்கான அறிகுறியா இருக்குமோ என்ற எண்ணங்கள் எழுந்துள்ளது.
பொதுவாக வாரன் பஃபெட் காரணமில்லாமல் ஒரு நிறுவனத்தை விற்பனை செய்ய மாட்டார்.ஹோம் சர்வீசஸ் ஆஃப் அமெரிக்கா நிறுவனம் 820 தரகு நிறுவனங்களையும், 5,400க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. 2024ம் ஆண்டில் இந்நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 10.70 கோடி டாலர் இழப்பை சந்தித்தது.
மற்றும் சந்தை நிலைமைகள் இறுக்கமடைந்து லாபம் குறைந்து வருவது போன்ற காரணங்களால் வாரன் பஃபெட் நிறுவனத்தை விற்க திட்டமிட்டு இருக்கலாம். அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் சந்தை கடுமையான அழுத்தத்தில் உள்ளது. அந்நாட்டு மைய வங்கியின் வட்டி விகித உயர்வால் அதிகரித்து வரும் அடமான விகிதங்கள் வீட்டு விற்பனையை கணிசமாக குறைத்துள்ளனஃ தேசிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, 2023ம் ஆண்டில் ஏற்கனவே உள்ள வீட்டு விற்பனை கிட்டத்தட்ட 30 ஆண்டுளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் நீண்டகால பின்னடைவு ஏற்படும் என்று வாரன் பஃபெட் எதிர்பார்க்கிறார் அதனால்தான் ரியல் எஸ்டேட் தரகு நிறுவனத்தை தற்போது கை கழுவ திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், பஃபெட்டின் இந்த நடவடிக்கை, நிலைமைகள் மேம்படுவதற்கு முன்பே மோசமடையக்கூடும் என்பதற்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
Written by: Subramanian