ARTICLE AD BOX
‘ஒரே நாடு ஒரே கல்வி ‘என்ற கோட்பாட்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் பாஜக அரசின் அனைத்து அபத்தமான திட்டங்களையும் ஒன்றுவிடாது அமல்படுத்துவதோடு, தமிழக பள்ளிக் கல்வியின் முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசிடம் தாரை வார்த்துவிட்டு, தற்போது இந்தியை மட்டும் எதிர்ப்பதாக வீரம் காட்டுவதா? முழு விபரங்கள்;
‘தேசியக் கல்விக் கொள்கையை நிர்பந்தித்து ஒன்றிய அரசு கல்வி நிதி ரூபாய் 2401 கோடியை பள்ளிக் கல்வி துறைக்கு தர மறுக்கிறது. மும் மொழிக் கொள்கையை அமல்படுத்தச் சொல்வதால் இந்த நிதி மறுக்கபடுகிறது..’ என்ற விவகாரம் தற்போது அரைகுறை தகவல்களுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நிஜத்தில் ‘இந்தி கற்பித்தல்’ இதில் பிரதான விஷயமல்ல.
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் என்ன தான் நடக்கிறது? கல்வி உரிமை பற்றி விவாதிக்கும் ஊடகங்களுக்கும், கல்வியாளர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?
‘சாமானிய மனிதர்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகள் இப்போது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டது’ என்ற அதிர்ச்சிகரமான உண்மையை ஏன் நாம் விவாதிக்க மறுக்கிறோம்.?
தமிழ்நாட்டின் கல்வி அமைச்சருக்கு அரசின் பள்ளி கல்வித் துறை சந்திக்கும் உண்மையான சவால்கள் பற்றிய புரிதல் இருக்கிறதா…? , முதல்வருக்கோ, துணை முதல்வரான கல்வித் துறை சந்தித்து வரும் ஆபத்து குறித்து சிறிதளவேனும் புரிதல் இருக்கிறதா…?
ஆட்சியாளர்கள், கூட்டணிக் கட்சிகள், எதிர்கட்சிகள் என அனைத்து தரப்பும் இரு மொழிக் கொள்கையை பேசுகிறார்கள்..? ஆனால், தாய் மொழி தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாகுறை தலை விரித்தாடுவதை இவர்கள் பொருட்படுத்தவே தயார் இல்லையே!
அடிப்படைக் கல்வியைக் கூட அரசுப் பள்ளி மாணவர்கள் பெற முடியாத வகையில், ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து முற்றிலும் நகர்த்தி, எமிஸ் பதிவேற்ற வேலைகளுக்கும், பிற பணிகளுக்கும் ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசின் கட்டளைகளுக்கு சலாம் போடும் வேலையை மட்டுமே நிறைவேற்றி வரும் அரசு தானே தற்போது தமிழ் நாட்டில் நடக்கிறது.
அரசு பள்ளிகளில் கற்பித்தல், கற்றல் நிகழவில்லை! மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆசிரியர்கள் நியமனம் இல்லை, தூய்மைப் பணியாளர்கள் பற்றாகுறை… என்பதில் அக்கறை காட்டாமல் மத்திய அரசு காலால் இடும் வேலையை தமிழக கல்வித் துறை தலையால் செய்து கொண்டு, பொது வெளியில் மத்திய அரசை எதிர்ப்பது போல பம்மாது செய்வதா?
சரி, இப்போது மத்திய – மாநில அரசின் பிரச்சனையைப் பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, பள்ளிக் கல்வியில் முதலில் கொண்டு வந்தத் திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். இது மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை தான்! அந்தக் கொள்கையின் கூறுகளில் தெளிவாக இது குறிக்கப்பட்டு உள்ளது. எனினும், கொரோனா காலத்தில் தற்காலிகமாக கொண்டு வருகிறோம் என ரூபாய் 200 கோடியை முதல்வர் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கினார்.
கல்வி அமைப்புகளும், கல்வியாளர்களும் அப்போதே இது தேவையற்றது என எதிர்த்தனர். ஆனால், அவர்களின் கருத்துகளைப் புறக்கணித்து, கடந்த மூன்று ஆண்டுகளாகவே நூற்றுக்கணக்கான கோடிகளை இதற்கு வீணடிக்கிறார்கள்.
அதே போல எண்ணும் எழுத்தும் திட்டம். இதுவும் மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இருக்கும் திட்டமே. ’’ஆசிரியர்களது பணியே எண்ணையும், எழுத்தையும் தவறில்லாமல் குழந்தைகளுக்குக் கற்பித்தல் தான். இதற்கு ஏன் ஒரு திட்டம் தேவைப்படுகிறது? ஒழுங்காக ஆசிரியர்களை பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை நடத்த விடுங்கள்…’’என்று மன்றாடிக் கெஞ்சினாலும், அரசு காது கொடுக்கவில்லை.
ஒரு சில குறிப்பிட்ட அமைப்புகள், தனிநபர்கள் பயனடைவதற்கே இந்தத் திட்டத்தை பிரம்மாண்டமாக முன்னெடுத்தது, அரசு. தமிழ்நாடு முதல்வர் இந்தத் திட்டத்தை சிலாகித்து விளம்பரம் செய்கிறார்.
ஆசிரியரின் வேலை என்ன? மாணவர்கள் திறம்பட கற்றுக்கொள்ள துணை நிற்பது தான். அதற்காகக் தான் மாத ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதை விடுத்து ’எண்ணும் எழுத்தும்’ படம் காட்டி நேரத்தை வீணடிக்கும் ஒரு திட்டம் எதற்காக? புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு கூறான இந்த திட்டம் முற்றிலும் பயனற்றது.
வானவில் மன்றங்கள், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக மாணவர்களுக்கு வினாடி வினா , திறன் மேம்பாட்டு வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் , நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் , பள்ளி மேலாண்மைக் குழுவின் வழியாக ஆசிரியர்கள் நியமனம், மாதிரிப் பள்ளிகள், எமிஸ் பதிவேற்றங்கள் இப்படியான பல திட்டங்களும் தேசியக் கல்விக் கொள்கையின் உட்கூறுகள் என்பதை தெளிவாக அறிந்தும் அவை இங்கு நடைமுறைப்படுத்தபடுவது எதற்காக?
இப்படி தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் வளாகத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் பல கூறுகள் இன்றும் மிகச் சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்திக் கொண்டு இந்தியாவிலேயே புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதில் முதல் மாநிலமாக இருப்பதால் தான் தமிழ்நாடு, பி. எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தையும் நடைமுறைப் படுத்தும் என மத்திய அரசு நினைக்க வாய்ப்பாகிவிட்டது. ஏற்கனவே பி.எம் ஸ்ரீ மாடலில், அதே போன்ற மாதிரிப் பள்ளிகளை சமூக நீதியை குழி தோண்டி புதைத்து தமிழ் நாட்டரசு நடத்துகிறதே..?
ஒரே நாடு ஒரே கல்விக்குத் துணை போகும் மாநில அரசு
கடந்த ஆறு மாத காலமாக அரசுப் பள்ளிகளில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது UDISE updates(Unified District Information System for Education) என்ற நடைமுறை. இதன் வழியாக இந்திய அளவில் தமிழகத்தின் அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் சகல விபரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்று விட்டனர். தேசியக் கல்விக் கொள்கை வரைவிலேயே ( Draft Policy) கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே கல்வியாக மாற்றி, அதற்குத் தலைவர் பிரதமர் என்று! அதை நோக்கி தமிழக அரசின் துணையோடு மிகத் துரிதமாக பணிகள் நடந்து கொண்டுள்ளன.
UDISE + தகவல் தொகுப்பில் கண்டறிய முடியாத அனைத்து மாணவர்களுக்கும் (KG _ 12TH STD ) புதிதாக பதிவேற்றம் செய்து கொள்ள வசதி 20.02.2025 வரை MHRD -ஆல் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இந்த பதிவேற்றங்களை செய்து, மாணவர் வருகை பதிவிற்கு நிகராக UDISE தகவல் தொகுப்பையும் பராமரிக்க பள்ளிகள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களின் தகவல் சரிபார்ப்பை முடித்துவிட்டன. மற்றவை பகுதியளவு நிறைவு செய்துள்ளன. உடனடியாக இந்த நிலுவைகளை பள்ளிகள் சரிசெய்ய தற்போது நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
*2. SCHOOL PROFILE & TEACHER PROFILE :*
UDISE + பணிகள் துவக்கத்தில் பள்ளிகளின் வசதிகள் (SCHOOL PROFILE & FACILITY )மற்றும் ஆசிரியர் விவரங்களை (TEACHER PROFILE ) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க (SAVE ) கேட்டுக் கொள்ளப்பட்டது. பகிரப்பட்டுள்ள EXCEL கோப்பில் தங்கள் பள்ளியின் SCHOOL PROFILE மற்றும் TEACHER PROFILE முன்னேற்ற நிலை வழங்கப்பட்டுள்ளது. STATUS PENDING /NEED CORRECTION என்றிருந்தால் பூர்த்தி செய்யப்படாத விவரங்களை மட்டும் ஆவணங்களின்படி பூர்த்தி செய்து SUBMIT செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
*3. SCHOOL LEVEL CERTIFICATION :*
மேற்காண் மூன்று விவரங்களையும் முழுமையாக SUBMIT செய்த பிறகு , பள்ளியளவில் சரிபார்ப்பு சான்றிதழ் (CERTIFICATION BY SCHOOL ) UDISE + தளத்திலேயே நிறைவு செய்ய வேண்டும். இதற்கான வசதி கொடுக்கப்பட்டவுடன் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுமாம்.
20.02.2025 வரை கூடுதல் அவகாசம் கேட்டு பெற்றுள்ளாமையால் , மேலும் தாமதமின்றி மாணவர, ஆசிரியர் மற்றும் பள்ளி வசதி விவரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது உண்மையானால் இவற்றையெல்லாம் தாழ் பணிந்து மத்திய அரசுக்கு செய்து தருவானேன்?
*ஏற்கனவே EMIS பதிவேற்றங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக மாநிலத் தலைநகரில் EMIS நடைமுறையை மிகச் சிலர் அடங்கிய ஒரு குழு பரிசீலித்துக் கொண்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் எமிஸ் பதிவேற்றங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆரம்ப காலங்களில் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் வருகையை மட்டுமே பதிவேற்றும் பணி எமிஸ் நடைமுறையாக இருந்தது.
ஆனால், இதுவரை செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்தும் எமிஸ் பதிவேற்றங்களாக மாற்ற ஆசிரியர்கள் கட்டாயப்படுகின்றனர். சிறு போட்டிகள் கூட விடு படாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும் எமிஸ் பதிவேற்றங்களாகத் தொடர்கின்றன. முதல் வகுப்பில் சேரும் குழந்தையின் குடும்ப விவரம் தன் விவரங்கள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவரின் அத்தனை விவரங்களையும் எமிஸ் பதிவேற்றங்கள் செய்து மத்திய அரசுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது தமிழக கல்வித் துறை!
மாணவர்கள் தேர்வு விபரங்கள், ஆதார் எண், வீட்டு முகவரி, வங்கிக் கணக்கு என எதையும் விடாமல் பதிவு செய்து வருகின்றனர். அதே போல ஆசிரியர்களது விபரங்களையும் தன் விவரங்கள், பணி விவரங்கள், விடுப்பு, பயிற்சி… . என விளக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றையும் பள்ளி ஆசிரியர்கள் தான் செய்கின்றனர். அதற்காக 6,000 பேர் நியமித்தது என சில மாதங்களுக்கு முன்பு கல்வி அமைச்சர் கூறினாலும், அது மிக சொற்ப எண்ணிக்கை. மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தான் இவற்றைச் செய்கின்றனர்.
நமது கேள்வி எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் செய்ய விடாமல் ஆசிரியர்களை இது போன்ற பணிகளுக்கு நிர்ப்பந்தித்தது ஒருபுறம் என்றால், வெற்று ஆவணங்களாக இப்படி பதிவேற்றம் செய்யும் வேலைக்கும், கல்விக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பள்ளியில் இது போன்ற செயல்பாடுகளை செய்ய ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தும் முறை புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறு. அதை நம் தமிழ்நாடு அரசும், கல்வித் துறையும் கொஞ்சமும் கேள்விக்கு உட்படுத்தாமல் செய்து கொண்டு கல்வியை அழித்து வருவது இங்குள்ள யாருக்கும் தெரியவில்லையா?

அதோடு இந்த UDISE+ செயல்பாடு என்பது நமது தமிழ்நாடு அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு நேர் எதிரானது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதிகாரத்தை ஒற்றை மையப்படுத்தும் வழி தான் இந்த மத்திய அரசின் முன்னெடுப்பு. “எனது மாணவர்களையும் ஆசிரியர்களையும் கட்டுப்படுத்த நீங்கள் யார்?” என்று முதலமைச்சர் பிரதமரை நோக்கிக் கேள்வி எழுப்பியாக வேண்டும்.
Also read
நமது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே மாநில அளவில் அடையாள எண் கொடுக்கப்பட்டு சில ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் போது, இந்த ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ஆசிரியர், மாணவர்கள், பள்ளிகள் விபரங்களை எடுத்துச் சென்ற பிறகு, மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவருக்கும் புதிய எண்கள் (National ID) தேசிய அளவில் வழங்கியுள்ளனர். மாநில அரசு இது பற்றி ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டதா? அனுமதி கேட்டதா? மாநில உரிமையை இழந்து நிற்கும் அரசு, தன்னை நம்பி இருக்கும் ஊழியர்களை மத்திய அரசுக்கு தாரை வார்த்து விட்டதாகவே பார்க்கலாம்.
வரக்கூடிய காலங்களில் மாநில அரசின் எந்தப் பள்ளியோ, ஆசிரியரோ மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பார்களா? என்பது சந்தேகமே. ஏனென்றால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த EMIS இப்போது மத்திய அரசின் UDISE ஆக மாறிவிட்டது.
ஆனால், இது பற்றிய எந்த சிந்தனையும் அரசுக்கு ஏன் இல்லை என்பது புதிராக உள்ளது. ஆசிரியர் சங்கங்களும் இது பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை. ஊடகங்கள் கூட இதை இது வரை பேசவில்லை. ‘எதிர்காலத்தில் அரசுப் பள்ளி என்ற அடையாளம் கூட இல்லாமல் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வரும் போது மும் மொழிக் கல்விக் கொள்கையும், நிதியும் மட்டுமே பிரதானப் பிரச்சனை அல்ல’ என்பதை அனைவரும் உணர வேண்டும்.
கட்டுரையாளர்; சாமானியன்