ARTICLE AD BOX
செய்தியாளர் பாலவெற்றிவேல்
நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கான கடமையாக நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக முதல்வர் மருந்தகத்தை தொடங்கி வைத்தப் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கல்வியும், மருத்துவமும் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்குவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில், ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் இந்த முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பெரிய கருப்பன் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்துகள் சந்தை விலையை விட 75% குறைவான விலையில் கிடைக்கும்.
காணொளி காட்சி மூலம் ஆயிரம் மருந்தகங்களை தொடங்கி வைத்த பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர், “கல்வியும், மருத்துவமும் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்குகிறது. கடந்த சுதந்திர தின உரையில் ஜெனரிக் மருந்துகளுக்காக 1000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தேன். நமது அரசு சாமானியனுக்கான அரசு என்பதற்கு சான்றாக இந்தத் திட்டம் உள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை இருக்கும் சாமானிய மக்கள் பயன்பெறுவார்கள். மருத்தகம் அமைக்க விண்ணப்பம் கொடுத்த தொழில் முனைவோருக்கு 3 லட்சம் மானியமும், கூட்டுறவு சங்கமாக இருந்தால் ரூ.2 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டது.
சாலிக்கிராமத்தில் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் மூலம் பி.பார்ம், டி.பார்ம் படித்த 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்வர் மருந்தகங்களில் சிறப்பு என்னவென்றால் மருந்துகள் 75% வரையில் தள்ளுபடி விலையில் விற்கப்படும். உயிர் காக்கும் பணியை செய்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டுகிறேன்.
இவ்வளவு நாட்களாக தனியார் மருந்தகத்திற்கு சென்றவர்கள் இனி முதல்வர் மருந்தகம் நோக்கி வருவார்கள். நிதி நெருக்கடி இருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்ய வேண்டிய கடமை என நினைத்து செய்து கொண்டிருக்கிறோம். முதல்வர் மருந்தகங்களுக்கான நோக்கம் கொஞ்சம் கூட சிதையாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டும். அடுத்த கட்டமாக மேலும் மக்கள் மருந்தகம் திட்டங்கள் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.