ARTICLE AD BOX

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டுகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கும் நோக்கில், பொது இடங்களுக்கு வளர்ப்பு நாய்களை அழைத்து வரும்போது வாய்மூடி (மஸ்க்) அணிவிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த விதியை மீறினால் நாய்களின் உரிமையாளர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சமீபத்தில் வளர்ப்பு நாய்களால் ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்தும் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பூங்கா காவலர்கள் இதை கண்காணித்து, விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர். மீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஏற்கனவே வளர்ப்பு நாய்களை கணக்கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் தெருக்களில் சுற்றித்திரியும் வெறிநாய்க் கடித்தால் தாமதிக்காமல் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
அதன்படி, வெறிநாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அந்த காயத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்களுக்கு கழுவ வேண்டும் நாய் கடித்ததில் இருந்து 28 நாட்களுக்குள் 4 தடுப்பூசிகளை போட வேண்டும். ரேபிஸ் மற்றும் இம்யூனோகுளோபின் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியது குறிப்பிடத்தக்கது