ARTICLE AD BOX
சென்னை: நான் தற்கொலைக்கு முயலவில்லை என பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார். மேலும் “மகா சிவராத்திரி வரை மிகவும் சிரமப்பட்டு தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். எனக்கும், என் கணவருக்கும் பிரச்சினை என கூறினார்கள். என் பின்னால் என் கணவர் தான் உள்ளார், அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் சாதிக்க முடிகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிசை பாடல்களை பாடியுள்ளவர் பிரபல பாடகி கல்பனா. இவர் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வசிக்கும் அவரது கணவர் பிரசாத் கடந்த 4ம் தேதி மாலை 4.30 மணிக்கு பலமுறை போன் செய்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் போன் எடுக்காததால், கல்பனா வசிக்கக்கூடிய குடியிருப்பு சங்கச் செயலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்க மாத்திரைகள் விழுங்கி படுக்கை அறையில் கல்பனா சுயநினைவின்றி கிடந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பியது.
இதையடுத்து கல்பனா மகள் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “எனது அம்மா தற்கொலை செய்ய முயற்சி செய்யவில்லை. மனஅழுத்தம் காரணமாக தூக்க மாத்திரைகள் சற்று அதிகளவில் எடுத்துக்கொண்டுள்ளார்” எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நான் தற்கொலைக்கு முயலவில்லை என பாடகி கல்பனா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் அளித்த பேட்டியில்; “நான் தற்கொலைக்கு முயலவில்லை. மகா சிவராத்திரி வரை மிகவும் சிரமப்பட்டு தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். எனக்கும், என் கணவருக்கும் பிரச்சினை என கூறினார்கள். எனக்கும், எனது கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
என் கணவர் தான் காவல்துறையினர், மருத்துவரை அழைத்து வர செய்தார், என்னை காப்பாற்றினார். என் பின்னால் என் கணவர் தான் உள்ளார், அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் சாதிக்க முடிகிறது. உடல்நிலை மற்றும் மன அழுத்தம் காரணமாக மாத்திரைகள் எடுத்து கொண்டேன். நான் தற்கொலைக்கு முயலவில்லை, அனைவரும் தவறாக பேசுகிறார்கள். பிரபலம் என்றால், சேற்றை வாரி அடிப்பது நியாயமா?” என தெரிவித்துள்ளார்.
The post நான் தற்கொலைக்கு முயலவில்லை: பாடகி கல்பனா விளக்கம் appeared first on Dinakaran.