ARTICLE AD BOX
திருநெல்வேலி சொதி குழம்பு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... மட்டன் குருமா மாதிரியே இருக்கும்...!
Tirunelveli Sodhi Recipe in Tamil: நமது தமிழ்நாட்டை உணவுகளின் தலைநகரம் என்றே கூறலாம். ஏனெனில் இங்கு உணவிற்கு பெயர் போன பல பிராந்தியங்களும், உலகின் தலைசிறந்த உணவுகளும் உள்ளன. அதனால்தான் நமது மாநிலம் உலகளவில் உணவுக்கென்று புகழ்பெற்ற நாடாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு புகழ்பெற்ற உணவு இருக்கும்.
மதுரை, காரைக்குடி போல சுவையான உணவுகளுக்கு புகழ்பெற்ற ஒரு ஊர்தான் திருநெல்வேலி. திருநெல்வேலி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அல்வாதான், ஆனால் அங்கு சுவையான மற்றும் சிறப்பான உணவுகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் திருநெல்வேலி சொதிக்குழம்பு. சாதம், வெஜிடபிள் பிரியாணி மற்றும் புலாவ் போன்றவற்றுக்கு அருமையான சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் நெல்லை சொதிக்குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

- பாசிப்பருப்பு - 50 கிராம்
- பீன்ஸ் - 4
- கேரட் - 1
- உருளைக்கிழங்கு - 1
- பச்சை மிளகாய் -2
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- பூண்டு - 2 பற்கள்
- எலுமிச்சை - சிறிய துண்டு
- உப்பு - தேவையான அளவு\
- தேங்காய் - 1/2 மூடி
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- இஞ்சியை துருவி சாறு எடுத்துக்கொள்ளவும். அதேபோல எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
- தேங்காய் துருவலை 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கெட்டியான பால் எடுத்து தனியே வைக்கவும்.
- பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து இரண்டாவது பால் எடுத்து தனியே வைக்கவும். மூன்றாவது முறையும் இதே போல் எடுத்து தனியே வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து அதோடு பச்சை மிளகாய், பூண்டு பல் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதன்பின் தேங்காய் பாலுடன் இஞ்சி சாறு மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
- காய்கறிகள் வெந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும். சுவையான திருநெல்வேலி சொதிக்குழம்பு ரெடி.
- இந்த சூப்பரான சொதிக்குழம்பு சாதம், பிரியாணி வகைகள், புலாவ் வகைகள், சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.