ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஏராளமான ரசிகர்களின் அபிமான பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். 26,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 82 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மேலும் ஃபீல்டிங் துறையில் அசத்துவது, வேகமாக டபுள் ரன்கள் ஓடுவது போன்றவற்றில் விராட் கோலி மிகவும் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார்.
அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக விராட் கோலி திகழ்கிறார் என்றே சொல்லலாம். அதன் காரணமாக விராட் கோலி சிறந்த ஃபிட்னஸை கடைபிடிக்க எம்மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறார் என்பதைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதிப்பது வழக்கமாகும். ஆனால் சில ஊடகங்கள் விராட் கோலி விளையாடும் கிரிக்கெட்டை தாண்டி அவர் என்ன சாப்பிடுகிறார்? எங்கே செல்கிறார்? என்பதிலே கவனம் செலுத்துகின்றன.
இந்நிலையில் கிரிக்கெட்டை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதைப் பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். அதை விட்டுவிட்டு நான் என்ன சாப்பிட்டேன் என்பதில் கவனம் செலுத்தக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார்.
இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை விளையாட்டுத் துறையில் முன்னேறும் நாடாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம். நம்மிடம் அதற்கான தொலைநோக்கு பார்வை இருக்கிறது. அதற்கான அடித்தளம் இன்று நடக்கிறது.
“இது பார்க்கும் மக்களை பற்றியது. அவர்களுக்கு விளையாட்டை பற்றிய கல்வி வேண்டும். எனவே ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் விளையாட்டைப் பற்றி பேச வேண்டும். அதை விட்டுவிட்டு நான் மதிய உணவிற்கு சாப்பிட்டதைப் பற்றியோ அல்லது டெல்லியில் எனக்குப் பிடித்த சோலே பட்சர் சாப்பிடும் இடத்தைப் பற்றியோ பேசுவதில் அர்த்தமில்லை”
“போட்டிகளின் இடையே அப்படி நீங்கள் பேச முடியாது. மாறாக ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக விளையாட என்ன செய்கிறார் என்பதைப் பற்றி பேச வேண்டும்” எனக் கூறினார். அவர் கூறுவது போல இப்போதெல்லாம் நேரலை போட்டியின் வர்ணனையில் கூட கிரிக்கெட்டைப் பற்றி பேசுவது குறைந்து விட்டது. மாறாக சினிமா, சொந்த வாழ்க்கை பற்றிய சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.