ARTICLE AD BOX
RCB Innovation Lab Indian Sports Summit எனும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மார்ச் 14 மற்றும் 15 என இரு தேதிகளில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹாக்கி ஜாம்பவான் ஸ்ரீஜேஷ், ஆர்சிபி அணியின் இயக்குநர் மோ போபட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விளையாட்டுக் கொள்கை, மேம்பாடு, பொது - தனியார் கூட்டாண்மையின் முக்கியத்துவம் மற்றும் வலுவான விளையாட்டு சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு உரையாடல் நிகழ்த்தப்பட்டன.
மார்ச் 15 ஆம் தேதி நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை இசா குஹாவிடம் நடந்த உரையாடலில் அவர் கூறுகையில், “இந்தியா விளையாட்டில் முன்னேறிய நாடாக மாறுவதற்கு நாங்கள் பாடுபடுகிறோம். எங்களுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை உள்ளது. இன்று அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது உள்கட்டமைப்பு மற்றும் பணத்தை செலுத்துபவர்களைப் பற்றியது மட்டுமல்ல.. அனைவரது கூட்டுப் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.
ஒரு ஒளிபரப்பு நிகழ்ச்சி விளையாட்டைப் பற்றிப் பேச வேண்டும். நேற்று நான் மதிய உணவிற்கு என்ன சாப்பிட்டேன் அல்லது டெல்லியில் எனக்குப் பிடித்த இடம் என்ன என்பது குறித்தெல்லாம் பேசக்கூடாது. நீங்கள் கிரிக்கெட்டில் அதைப் பேசமுடியாது. மாறாக ஒரு வீரரின் செயல்பாடுகள் குறித்துப் பேசலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் தற்போதைய பிரபலமான கிரிக்கெட் வீரர் யார் என்றால் விராட் கோலியைச் சொல்லலாம். அவர் குறித்தான பேச்சுகளுக்கு கிரிக்கெட் உலகிலும் சரி, பொதுவெளியிலும் சரி எப்போதும் குறைவிருக்காது. அவ்வப்போது அவரது உணவுகள் குறித்தான செய்திகளும் வைரலாகும். இத்தகைய சூழலில்தான் விராட் கோலி, தனிப்பட்ட நபர்களை விட கிரிக்கெட் குறித்தும், கிரிக்கெட் வீரர்களது செயல்பாடுகள் குறித்தும் பேசுவதன் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்..
ஓய்வு குறித்தான கேள்விகளுக்கும் விராட் கோலி பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “பதட்டப்பட வேண்டாம். நான் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. தற்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் இன்னும் விளையாடுவதை விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். மீண்டும் கோலி கேப்டனாக பொறுப்பேற்க இருப்பதாக வதந்திகள் வந்த நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் பொறுப்பேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.