ARTICLE AD BOX
ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் இளையராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
“அனைவருக்கும் நன்றி. மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழி அனுப்பி வைத்தீர்கள். நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தார். முறையாக ஒத்திகை பார்த்து பின்னர் சிம்பொனி இசையை அரங்கேற்றினேன். ஒவ்வொரு தருணத்திலும் ரசிகர்கள் கைதட்டியதால் இசை கோர்ப்பாளரே ஆச்சரியமடைந்தார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள நிகழ்ச்சி.
அரசு மரியாதையுடன் முதலமைச்சர் என்னை வரவேற்றது மனம் நெகிழச் செய்தது. தமிழக மக்கள் என்னை வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிம்பொனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடல்களையும் வாசித்து, அதில் நானும் பாடினேன். எனது சிம்பொனி இசை துபாய், பாரிஸ் உட்பட 13 நாடுகளில் நடக்கவுள்ளது. சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்; நேரடியாக கேட்க வேண்டும். நம் மக்களும் சிம்பொனியை கேட்க வேண்டும்.
ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். இசை தெய்வம் என்று அழைக்கும் போது எனக்கு என்ன தோன்றும் என்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்களே என்று தோன்றும்.
பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன். இதை இளைஞர்கள் உணர வேண்டும். அவரவர்கள் அவரவர் துறையில் வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம், இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
லண்டனில் தனது முதல் சிம்ஃபனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பாஜக சார்பில் கரு.நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்றனர்.
அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, திரைத்துறையினரும், ரசிகர்களும் இளையராஜாவுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அவரை வரவேற்க வந்திருக்கிறேன். மிகப் பெரிய உலக சாதனையை நிகழ்த்தி தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா என்றார்.
உலகின் மிகச் சிறந்த பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இளையராஜா சிம்ஃபனியை அரங்கேற்றினார். இதன்மூலம் சிம்ஃபனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் இளையராஜா.